ரிஷப் பண்ட் துவக்க வீரராக களம் இறங்க இன்னும் ஐந்து ஆண்டு காலம் ஆகும் என கிண்டலடித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரர் வீரேந்திர சேவாக்.
இந்திய அணி இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. துரதிஷ்டவசமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த ஷிகர் தவான் கட்டைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக உலகக் கோப்பையில் தொடர்ந்து விலக நேரிட்டது. இதனால் ரோகித் சர்மாவிற்கும் மற்றும் இந்திய அணிக்கும் பெருத்த அடியாக அமைந்தது. தற்போது ரோகித் சர்மா நல்ல துவக்க ஜோடி இல்லாமல் தவித்து வருகிறார். காரணம் கே எல் ராகுல் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை.
இன்று நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்து கொண்டிருக்கையில் திடீரென அடிபட்டு போட்டியின் துவக்கத்திலேயே வெளியேறினார் கே எல் ராகுல். ஆதலால், துவக்க வீரராக களம் இறங்க முடியாது.
அதனால், விஜய் சங்கருக்கு பதிலாக இன்றைய போட்டியில் அணியில் இடம்பெற்ற ரிஷப் பண்ட் ஐபிஎல் போட்டிகளில் துவங்கிய அனுபவத்தைக் கொண்டு இன்று துவங்குவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் என்னால் சமாளிக்க முடியும் என ராகுல் கூறியதால் அவரே துவங்கினார். ஆனால் ஒன்பது பந்துகள் பிடித்த அவர் ஒரு ரன் மட்டுமே எடுத்து கிறிஸ் வோக்ஸ் பந்தில் அவர் வசமே பிடிபட்டு வெளியேறி ஏமாற்றினார். இதனால் இந்திய அணிக்கு இது ஒரு மோசமான துவக்கமாக அமைந்தது.
இதுகுறித்து தனக்கே உரித்தான கிண்டலான பாணியில் கருத்து தெரிவித்திருந்தார் விரேந்தர் சேவாக். அவர் கூறியதாவது, தவான் மற்றும் ரோஹித் சர்மா இருக்கும் நிலைக்கு இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய அணியில் வேறு எவரும் துவக்க வீரராக களமிறங்க இயலாது. பண்ட் தொடர்ந்து முயற்சி செய்து வந்தால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைக்கும் என்றார்.