இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மற்றும் தற்போதைய ஐசிசியின் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இந்திய அணியின் குழப்பமான நான்காவது இடத்திற்கு கேஎல் ராகுல் சரிப்பட்டு வரமாட்டார்; விஜய் சங்கர் தான் அந்த இடத்திற்கு சரியாக இருப்பார் என கருத்து தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் உலக கோப்பை தொடர் வரும் மே 30ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உலகக் கோப்பைக்கு செல்லும் 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் நான்காம் இடத்தில் களமிறங்கியிருக்கும் வீரருக்காக விஜய் சங்கர், அம்பத்தி ராயுடு, ரிஷப் பண்ட் ஆகியோரிடையே கடும் போட்டி நிகழ்ந்தது. இறுதியில் தலைமை தேர்வாளர் எம் எஸ் கே பிரசாத் இந்த இடத்திற்கு விஜய் சங்கர் தான் சரியாக இருப்பார். அவர்தான் பேட்டிங் பீல்டிங் மற்றும் பவுலிங் என மூன்று கோணங்களிலும் செயல்படக்கூடியவர் என்றார்.
விஜய் சங்கரை தேர்வு செய்தது கடும் சர்ச்சையை கிளப்பியது. காரணம், இவர் ஐபிஎல் தொடரில் பேட்டிங் பவுலிங் இரண்டிலும் சரியாக செயல்படவில்லை. ஆனால் மறுபுறம் அம்பத்தி ராயுடு வோம் பேட்டிங்கில் பீல்டிங்கில் இரண்டிலும் கடுமையாக சொதப்பியதால் விஜய்சங்கர் பரவாயில்லை என்ற கோணத்தில் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டனர்.
தற்போது ஆடும் 11 வீரர்களில் நான்காம் இடத்திற்கு இவர் தான் சரியாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய ஐசிசியின் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது கருத்தை தெரிவித்து அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.
நான்காவது இடத்திற்கு விஜய் சங்கர் தான் சரியாக இருப்பார். கேஎல் ராகுல் துவக்க வீரராக களம் இறங்குவதிலேயே அனுபவம் கொண்டுள்ளார். நடுத்தர பேட்டிங் வரிசையில் இவருக்கு பெரிதும் அனுபவம் இல்லை. ஆனால் விஜய் சங்கர் நடுத்தர பேட்டிங் வரிசையில் நல்ல அனுபவம் கொண்டுள்ளார். மேலும் விஜய் சங்கர் மற்ற பந்துவீச்சாளர்கள் சோதப்பினால் கூடுதல் பந்துவீச்சு வாய்ப்பாக இருப்பார். ஸ்பின்னர்களை நன்கும் ஆடக்கூடியவர் என்பதால், நான் இவரை 4வது இடத்திற்கு சரியானவர் என நம்புகிறேன் என்றார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.