இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்ய காத்திருக்கிறார் சகிப் அல் ஹசன்.
2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது சேரக்கூடிய ரவுண்ட் ராபின் எனப்படும் லீக் சுற்று முடிவில் இருக்கும் தருவாயில் ஆஸ்திரேலியா இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு நுழைந்துவிட்டன நியூசிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைவதற்கு இன்று நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
வங்கதேச அணி இந்த உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை என்றாலும், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளிடம் போராடியே தோல்வியை தழுவியது. மேலும், தென்னாபிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியை அபாரமாக வென்றது.
வங்கதேச அணிக்காக, அணியின் ஆல்ரவுண்டர் சகிப் அல் ஹசன் சிறப்பாக ஆடி 8 லீக் போட்டிகளில் 7 இன்னிங்சில் 542 ரன்கள் மற்றும் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 2 சதங்கள் மற்றும் 4 அரை சதங்களையும் விளாசியுள்ளார். உலகக் கோப்பை வரலாற்றில் இதற்கு முன்பு எந்த ஒரு ஆல்ரவுண்டரும் ஒரு தொடரில் 400 ரன்களை கடந்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை 6 போட்டிகளில் 50+ ரன்களை அடித்து உள்ள சகிப் அல் ஹசன், பாகிஸ்தான் அணிக்கு எதிராக இன்று மோதவிருக்கும் போட்டியில் 50+ ரன்கள் அடித்தால், ஒரு உலகக் கோப்பைத் தொடரில் 7 முறை 50+ ரன்களை அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்வார்.
மேலும், ஒரு உலக கோப்பை தொடரில் 7 முறை 50+ ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் எடுத்துச் செல்வார்.