நீங்கள் சாம்பியனே இல்லை, அதன் தகுதியை இழந்து விட்டீர்கள் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் தோனியை சரமாரியாக சாடியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் தோல்வியே தழுவிடாத அணியாக இருந்த இந்திய அணியை, இங்கிலாந்து நேற்றைய போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு துவக்க ஜோடி ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜேசன் ராய் இருவரும் இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 260 ரன்கள் சேர்த்தது.
அடுத்ததாக, ஜேசன் ராய் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆனால் ஜானி பேர்ஸ்டோ 111 ரன்கள் அடித்து அசத்தினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஜோடி குலதீப் மற்றும் சஹால் இருவரும் தங்களது 20 ஓவர்களில் 169 ரன்கள் குவித்தது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாக அமைந்தது. அதன்பிறகு வேகப்பந்துவீச்சாளர் சமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாலும் ஸ்டோக்ஸின் சிறப்பான பேட்டிங் இங்கிலாந்து அணியை 50 ஓவர்களில் 337 ரன்கள் எடுக்க உதவியது.
அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேஎல் ராகுல் மிக மோசமான துவக்கத்தை கொடுத்தார். பின்பு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ரோஹித் இருவரும் தங்களது இயல்பான நேர்த்தியை கையாண்டு அரைசதம் அடித்தனர் துரதிஷ்டவசமாக விராட் கோலி 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வழக்கம் போல அரை சதத்தை சதமாக மாற்றாமல் வெளியேறி ஏமாற்றமளித்தார்.
மறுமுனையில் நிதானித்த ரோகித் சர்மா சதம் அடித்த பிறகு அதிரடியில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஆட்டம் இழந்து வெளியேறி அதிர்ச்சியளித்தார். ஒரு கட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் நன்றாக ஆடிக் கொண்டிருக்கும்போது ரிஷப் பண்ட் கொடுத்து ஆட்டமிழக்க, தோனி உள்ளே வந்த பிறகு இந்திய அணியின் பேட்டிங்கில் சற்று மந்தம் காணப்பட்டது.
அதன்பிறகு ஹர்திக் பாண்டியாவும் அவுட் ஆனார். இறுதியில், கேதர் ஜாதவ் – தோனி இருவரும் கடைசி 6 ஓவர்களில் பவுண்டரிகள் அடிக்க பெரிதும் முயற்சிக்கவில்லை. ஓவருக்கு 12 ரன்களுக்கு மேல் தேவைப்பட்ட போது வெறும் 6 ரன்கள் ஓவருக்கு என்ற நிலையில் எடுத்துக் கொண்டிருந்தனர். இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
அனுபவம் மிக்க தோனியின் இத்தகைய மந்தமான ஆட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ். அவர் கூறுகையில், “நீங்கள் யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.. நான் பாகிஸ்தான் அரையிறுதிக்குள் நுழைவதற்காக இதை பேசவில்லை. உலகமே உங்களை சாம்பியன் என பார்த்துக் கொண்டிருக்கையில், அதற்கு ஏற்றார் போல் நீங்கள் ஆடவில்லை. தற்போது சாம்பியன் என்ற தகுதியை இழந்து விட்டீர்கள்” என தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்