இந்த வருட உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி உச்சபட்ச ஆரவாரமாக இருக்கும் அதுவும் இந்தியாவில் நடப்பதால் கூடுதலாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
உலகக்கோப்பை தொடர் இந்த வருடம் இந்தியாவில் நடைபெறுகிறது. வருகிற அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கி நவம்பர் மாதம் கடைசி வாரம் வரை நடைபெறும் என்கிற பேச்சுக்கள் அடிபடுகின்றன. மேலும் கணிக்கப்பட்ட அட்டவணைகள் வெளிவந்துவிட்டன. அதிகாரப்பூர்வமாக இன்னும் பிசிசிஐ தரப்பிலிருந்து வெளிவரவில்லை. ஆனால் மொத்தம் 11 மைதானங்களில் நடைபெறுகிறது என்கிற தகவல்கள் உறுதியாகி உள்ளது.
இந்தியாவில் நடப்பதால் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து பங்கேற்குமா? என்கிற பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்தபோது ஆங்காங்கே வரும் தகவல்களின் அடிப்படையில் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வருகிறது என்று தெரிய வந்திருக்கிறது. மேலும் சென்னை, கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் அகமதாபாத் என ஐந்து மைதானங்களில் பாகிஸ்தான் அணி மோதும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டி சுமார் 1.25 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது. இதற்காக பாகிஸ்தான் அணியின் தரப்பில் இருந்து சிலர் குஜராத்தில் எங்களுடைய போட்டிகள் நடத்தினால் நாங்கள் வரமாட்டோம் என்கிற கருத்துக்களையும் முன் வைத்து வருகின்றனர்.
இவை ஒருபுறம் இருக்க, இந்த உலக கோப்பையில் பைனலைவிட இந்தியா-பாகிஸ்தான் போட்டி தான் எதிர்பார்ப்பின் உச்சத்திலும், பரபரப்பின் உச்சத்திலும் இருக்கும் என்று தனது கருத்தையும் முன்வைத்ததோடு இந்திய மண்ணில் அவர்களை வீழ்த்தி வெற்றிபெற வேண்டும் என்றும் பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.
“வருகிற 50 ஓவர் உலகக்கோப்பை இந்தியாவில் நடத்தப்படுகிறது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்தாலும், உலகக்கோப்பை பைனலைவிட மிகப்பெரிய கொண்டாட்டம் மிகுந்த போட்டியாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே நடக்கும் போட்டி இருக்கும். அதுவும் அகமதாபாத்தில் சுமார் 1.25 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய மைதானத்தில் நடக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போது பத்தாயிரம் பேர் அமர்ந்திருந்தாலே ரசிகர்களின் கரகோஷம் சுமார் 50,000 மேற்பட்டோர் இருப்பது போல தோன்றும். இம்முறை ஒரு லட்சம் பேருக்கும் மேல் அமர்ந்து பார்க்க உள்ளனர். அதன் கரகோஷம் எப்படி இருக்கும் என்பதை நினைக்கும்போது இப்போதே ஆர்வம் வந்துவிடுகிறது. சீட் நுனியில் அமர்ந்து கொண்டு இதயத்துடிப்பை உச்சத்தில் வைத்திருக்கும் போட்டி என்பதால் இந்த உலகக் கோப்பையில் பைனலை விட இதுதான் மிக முக்கியமான போட்டியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
கடந்த முறை டி20 உலக கோப்பையில் இந்திய அணி மகத்தான வெற்றியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்றது. இம்முறை இந்தியாவில் நடக்கிறது. இந்திய மண்ணில் நீண்ட இடைவெளிக்கு பிறகு, இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறுகிறது. எனவே இந்திய அணி இங்கே பாகிஸ்தானை வீழ்த்தினால் எவ்வளவு உற்சாகமாக ரசிகர்கள் இருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.” என்றார்.