இந்தியா நியூசிலாந்து இடையேயான டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி வரும் 18ம் தேதி இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில் துவங்க உள்ளது.
ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் இந்த போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர். இரு அணி வீரர்களும் இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்க கடுமையாக பயிற்சி செய்து வருகின்றனர்.
இந்தநிலையில், இந்த போட்டியில் நியூசிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புள்ள ஐந்து இந்திய வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
ரிஷப் பண்ட்;
இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டி வரை தகுதி பெறுவதற்கு காரணமான இந்திய வீரர்களில் ரிஷப் பண்ட் தான் முக்கியமானவர். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் தொடரில் பயமே இல்லாமல் ருத்ரதாண்டவம் ஆடிய ரிஷப் பண்ட், தனி ஒருவனாக போராடி போட்டியையே மாற்றி கொடுத்தார், இதன் மூலமே கடைசி நேரத்தில் இந்திய அணியால் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடிந்தது. இறுதி போட்டியிலும் ரிஷப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு மிகப்பெரும் பலமாக அமையும், அதே போல் மறுபுறம் நியூசிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியையும் ஏற்படுத்தும்.
விராட் கோலி;
இந்திய அணியின் கேப்டனும், நம்பிக்கை நாயகனுமான விராட் கோலி வழக்கம் போல் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே அது இந்திய அணிக்கு மிகப்பெரும் பலத்தை கொடுக்கும். விராட் கோலி சிறப்பாக விளையாடியே ஆக வேண்டும் என்றே ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
ரோஹித் சர்மா;
டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும் அதில் ரோஹித் சர்மாவின் பங்கு மிகப்பெரியதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் அசுரபலம் பெற்றுள்ள நியூசிலாந்து அணியை, இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கும் ரோஹித் சர்மா சிறிது நேரம் தாக்குபிடித்து விளையாடிவிட்டால் அதுவே நியூசிலாந்து அணி வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
இஷாந்த் சர்மா;
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் பந்துவீச்சை யூனிட்டையே வழிநடத்தும் இஷாந்த் சர்மா, தனது நேர்த்தியான பந்துவீச்சின் மூலம் நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு நெருக்கடியை கொடுப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
ரவீந்திர ஜடேஜா;
ரிஷப் பண்ட்டை போலவே இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறுவதில் ரவீந்திர ஜடேஜாவின் பங்கும் மிக முக்கியமானது என்றால் அது மிகையல்ல. பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்திலுமே மாஸ் காட்டி வரும் ஜடேஜா இறுதி போட்டியிலும் நிச்சயம் நியூசிலாந்து அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.