இதை நான் செய்திருந்தால் எனது கிரிக்கெட் வாழ்க்கை எப்பவோ முடிந்திருக்கும்; புலம்பும் மூத்த வீரர்!

இதை மட்டும் நான் செய்திருந்தால் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் எப்போதோ முடிந்து இருக்கும் என மிகவும் வருத்தத்துடன் பேசியுள்ளார் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர்.

பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்து வந்த முகமது அமீர் கடந்த 2010ஆம் ஆண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டதால் சுமார் ஐந்து ஆண்டுகள் தடைசெய்யப்பட்டார். அதன்பிறகு 2016 ஆம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் தேசிய அணியில் இடம் பிடித்தார். அந்த அணிக்காக டெஸ்ட் போட்டியில் இன்றியமையாத முன்னணி பந்துவீச்சாளராக உருவெடுத்தார். மேலும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் மீண்டும் இடம் பிடித்த அவர் அதிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தி தொடர்ந்து முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்துவருகிறார்.

தற்போது வரை அணியில் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் கடந்த ஆண்டு திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். வெறும் 28 வயதான அவர் எதற்காக இந்த வயதிலேயே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என கடும் விமர்சனங்கள் எழுந்தன.

அந்த விமர்சனத்திற்கு தொடர்ந்து மௌனம் காத்து வந்த அவர் தற்போது அதற்கான பதிலையும் அளித்திருக்கிறார். அதே நேரம் தொடர்ந்து லிமிடெட் போட்டிகளில் தனது செயல்பாடுகளை கொடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். விமர்சனத்திற்கு பதில் அளித்த அவர் கூறுகையில், “அனைவரும் எனது வயதை சுட்டிக்காட்டி, எதற்காக இந்த வயதிலேயே ஓய்வு பெறுகிறார் எனக்கு புத்தி இருக்கிறதா? என கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் சுமார் 5 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் இருந்தேன்.

கார் வைத்திருக்கும் ஒரு நபர் ஒரு வாரம் காரை ஓட்டவில்லை என்றால் அதற்கு ஆயில் மாற்ற வேண்டும். சாதாரண கார் விஷயத்தில் இப்படியிருக்கையில் 5 ஆண்டுகள் விளையாடாமல் இருப்பது சாதாரண விஷயம் அல்ல. அதனை மனதில் கொண்டு பேசுங்கள்.

எனது வேலை பளுவை மேலாண்மை செய்வது எனக்கு சற்று கடினமாக இருந்தது. ஆதலால் நான் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்தேன். தங்கள் நாட்டிற்காக விளையாடுகையில் உங்களால் முடியவில்லை என்றால் அதை ஒப்புக்கொண்டு சற்று விலகி விடவேண்டும். இல்லையெனில் இது நாட்டிற்கு செய்கிற துரோகம் போல தெரியும்.

நான் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி இருந்தால் தற்போது 3 விதமான போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்கும் நிலை ஏற்பட்டு இருக்கும். எனது கிரிக்கெட் வாழ்க்கையே முடிந்திருக்கும். அதனால் நான் அந்த சமயத்தில் எடுத்த முடிவே எனக்கு சரியாக அமைந்திருக்கிறது. தொடர்ந்து லிமிடெட் ஓவர் போட்டிகளில் கவனம் செலுத்தி அதிக விக்கெட்டுகளை கைப்பற்ற தயாராக இருக்கிறேன்.” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.