சத்தியமா சொல்றேன்… முகமது ஷமியை போன்ற ஒருவர் இனி கிடைக்கவே மாட்டார்; பாராட்டி பேசிய பயிற்சியாளர்
இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பராஸ் மாம்ப்ரே, சீனியர் வீரரான முகமது ஷமியை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்திருந்தாலும், ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இந்திய அணி இறுதி போட்டி வரை சென்றதை பாராட்டாமல் யாருமே இருக்க முடியாது.
நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட வலுவான அணிகளை இந்திய அணியால் இலகுவாக வீழ்த்த முடிந்ததற்கு விராட் கோலி, முகமது ஷமி உள்ளிட்ட சீனியர் வீரர்கள் தான் மிக முக்கிய காரணமாக திகழ்ந்தனர் என்றால் அது மிகையல்ல. இதில் குறிப்பாக சீனியர் வீரரான முகமது ஷமி, இந்திய அணியின் பந்துவீச்சிற்கு மிகப்பெரும் பலமாக திகழ்ந்தார்.
ஒவ்வொரு போட்டியிலும் விக்கெட்டை நடத்திய முகமது ஷமி, நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு, பல சாதனைகளையும் படைத்து இந்திய அணிக்கு சில நம்ப முடியாத வெற்றிகளையும் பெற்று கொடுத்தார்.
பெரிய பாராட்டுக்களையும், அங்கீகாரங்களையும் பெறாத இந்திய வீரர்களில் முகமது ஷமியும் ஒருவராக பார்க்கப்படும் நிலையில், முகமது ஷமி போன்ற திறமையான ஒரு பந்துவீச்சாளரை யாராலும் உருவாக்க முடியாது என இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான பராஸ் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து பராஸ் மாம்ப்ரே பேசுகையில், “முகமது ஷமி தனித்துவமிக்க மிக சிறந்த பந்துவீச்சாளர். பந்துவீச்சு பயிற்சியாளரான நான், என்னால் முகமது ஷமி போன்ற பந்துவீச்சாளரை உருவாக்க முடியும் என பேசினால், அது நிச்சயம் பொய்யாக தான் இருக்கும். முகமது ஷமி போன்ற ஒரு திறமையான பந்துவீச்சாளர் கிடைப்பதே கஷ்டம். முகமது ஷமி தனது பந்துவீச்சில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளார். அவரது பந்துவீச்சை எதிர்கொள்வது மிக கடினம். ஒவ்வொரு பந்தையும் சரியான திசையில், சரியான வேகத்தில் துல்லியமாக வீசும் முகமது ஷமியின் திறமை அரிதானது” என்று தெரிவித்தார்.
நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் வெறும் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடிய முகமது ஷமி அதில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.