இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை பகிர்ந்து கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் தனது கருத்தினை முன்வைத்துள்ளார்.
2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் முடிவுற்ற பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை பகிர்ந்து அளிக்க வேண்டும் என மிகப்பெரிய சர்ச்சை எழுந்தது. அதாவது லிமிடெட் ஓட்ட ஓவர் போட்டிகளில் கேப்டன் பொறுப்பை ரோஹித் ஷர்மாவிற்கும் டெஸ்ட் போட்டியின் கேப்டன் பொறுப்பை தொடர்ந்து விராட் கோலியும் இருக்க வேண்டும் என கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ஆனால் இதற்கு செவிசாய்க்காத பிசிசிஐ தொடர்ந்து விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் நடிக்குமாறு தெரிவித்தது. இந்நிலையில் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா மீண்டும் ஒரு முறை கோப்பையை வென்று தன்னை சிறந்த கேப்டனாக நிரூபித்திருக்கிறார். இதை வைத்து குறைந்தபட்சம் 20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் கொடுக்கவேண்டும் என தனது கருத்தினை பதிவு செய்து சர்ச்சையை கிளப்பியிருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர்.
அவர் தெரிவித்த கருத்தாவது, “விராட் கோலி இந்திய அணியை பல முறை சிறப்பாக வழி நடத்திச் சென்றிருக்கிறார். அதை நான் ஒருபோதும் மறுக்க மாட்டேன். ஆனால் சுமார் 2010-ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து விளையாடி வரும் அவர் சில காலங்களிலேயே கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டதால் அதிக பாரத்துடன் இருக்கிறார் என நான் உணருகிறேன். அவரது பாரத்தை குறைப்பதற்காக குறைந்தபட்சம் 20 ஓவர் போட்டிகளில் ரோகித் சர்மாவிற்கு கேப்டன் பொறுப்பை வழங்க வேண்டும். இது விராட் கோலிக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.
ஐபிஎல் தொடர் மூலம் ரோகித் சர்மா தன்னை நிரூபித்திருக்கிறார். தனது கேப்டன் பொறுப்பு சிறந்தது எனவும் ஒவ்வொரு முறை சுட்டிக்காட்டி வருகிறார். வருகிற ஆஸ்திரேலிய தொடரில் கேப்டன் பொறுப்பு கிடைத்திருந்தால் தன்னை நிரூபித்து காட்டுவதற்கு சரியான வாய்ப்பாக அவருக்கு அமைந்திருக்கும். இதை நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அவரை கேப்டன் பொறுப்பில் காண்பதற்காக ஆர்வமாக இருக்கின்றனர். இதனை அணி நிர்வாகம் நிச்சயம் பரிசீலிக்க வேண்டும்.” என பதிவு செய்திருந்தார்.