அணியோட நிலைமையே சரியில்ல,இப்ப எதுக்கு இவங்களுக்கு ஓய்வு ; விராட் கோலி, ரோஹித் சர்மா ஓய்வு குறித்து விமர்சனம் செய்த கம்பீர்..
2023 உலகக் கோப்பை தொடர் நெருங்கும் போது ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு எதற்கு ஓய்வு என கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய அணி வருகிற ஜனவரி 3ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இலங்கை அணியுடன் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. தலா மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணி இரு தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
இதில் டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகவும், சூரியகுமார் யாதவ் துணைக்கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். டி20 அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், புவனேஷ்வர் குமார் ஆகியோர் டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது நிரந்தரமா? தற்காலிகமா? என தற்போது வரை தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் 2023 ஒரு நாள் உலகக் கோப்பை தொடர் நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்திய அணியின் கோர் வீரர்களாக கருதப்படும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களுக்கு எதற்கு தேவையில்லாமல் ஓய்வு கொடுக்கிறீர்கள் என்று இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணி குறித்தும் இந்திய கிரிக்கெட் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் கவுதம் கம்பீர்., 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடுவார்கள் என்றால் அவர்களுக்கு தற்பொழுது இந்த ஓய்வு தேவை இல்லாதது என விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பீர் பேசுகையில்,“முதலில் நாம் இந்திய அணியின் கோர் வீரர்களை கண்டறிய வேண்டும், பிறகு அதில் மாற்றங்களோ அல்லது நீக்கங்களோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், தற்பொழுது இந்திய அணியில் செட்டில்லான வீரர்கள் என இல்லை, இதனால் தேவையில்லாத ஓய்வுகள் கொடுக்கக் கூடாது, உலகக்கோப்பை தொடர் நெருங்கிக் கொண்டிருக்கிறது, நீங்கள் உலகக்கோப்பை தொடரை பங்கு பெற வேண்டும் என்றால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற வீரர்களுக்கு ஓய்வளிக்காமல், அவர்களை அதிகப்படியாக விளையாடவைக்க வேண்டும். அவர்களும் உலகக் கோப்பை நடக்கும் இந்த சமயத்தில் தேவையில்லாத ஓய்வுகளை எடுக்கக் கூடாது, அப்படி செய்யும் பட்சத்தில் உலகக்கோப்பை தொடர் நெருங்கும்போது உங்களிடம் அணியின் நிலையான வீரர்கள் இல்லாததை அப்பொழுதுதான் உணர்வீர்கள். இதே தவறை தான் கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி செய்தது” என கவுதம் கம்பீர் தவறை சுட்டிக்காட்டியதுடன் இந்திய அணிக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்.