சூரியகுமார் யாதவ் மாதிரி பிளேயர நாங்க டீம்லயே எடுத்திருக்க மாட்டோம் – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பேட்டி!

சூரியகுமார் யாதவ் பாகிஸ்தானியாக இருந்திருந்தால் இந்நேரம் அவர் டீம்லயே இருந்திருக்க மாட்டார் என வித்தியாசமான கருத்தை கூறியுள்ளார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் பட்.

இந்திய அணியின் மிஸ்டர் 360 டிகிரி என்ன அழைக்கப்படும் சூரியகுமார் யாதவ். சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடும் ஒவ்வொரு போட்டிகளிலும் பேசுபொருளாக மாறி வருகிறார். தனது அதிரடியான பேட்டிங் மூலம் பேட்டிங் செய்வது மிகவும் எளிது என்பதையும் வெளிக்காட்டி வருகிறார்.

நடந்து முடிந்த இலங்கை அணியுடனான மூன்றாவது டி20 போட்டியில் 45 பந்துகளில் சதம் விளாசினார். 51 பந்துகளில் 112 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கடந்த ஆறு மாதங்களுக்குள் மூன்று டி20 சதங்கள் அடித்திருக்கிறார். இவை அனைத்தும் 200 பிளஸ் ஸ்ட்ரைக் ரேட்டில் வந்தவை என்பது இன்னும் ஒரு சாதனையாக இருக்கிறது.

தற்போது கிரிக்கெட் உலகமே அவரது பேட்டிங் குறித்து பெருமிதமாக பேசி வரும் நிலையில், சூரியகுமார் யாதவ் பாகிஸ்தான் நாட்டிற்காக விளையாடி இருந்தால் அவரை அணியிலேயே எடுத்திருக்க மாட்டார்கள் என வித்தியாசமான கருத்தை கூறியிருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட்.

“நான் சூரியகுமார் யாதவ் பற்றி பல்வேறு செய்திகளில் படிக்கும் பொழுது, அவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு 30 வயதிற்கும் மேல்தான் வந்திருக்கிறார் என கேள்விப்பட்டேன். தற்போது அவர் பாகிஸ்தான் அணியில் மட்டும் விளையாடி இருந்தால் அவரை அணியிலேயே எடுத்திருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு வீரர் இருக்கிறார் என்பதே தெரியாமல் போயிருக்கும்.” என யூடியூப் சேனலுக்கு பேட்டியளிக்கும் பொழுது குறிப்பிட்டு இருக்கிறார்.

ரமீஷ் ராஜா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சேர்மனாக இருந்தபோது, டி20 போட்டிகளில் 30 வயதிற்கும் மேற்பட்டோர் விளையாட இனி அனுமதி கிடையாது. புதிதாக உள்ளே வரும் வீரர்கள் மிகவும் இளம் வீரராக இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் தேர்வு செய்வோம் என கருத்து தெரிவித்ததோடு, அதை நடைமுறையிலும் வைத்திருந்தார். இதன் அடிப்படையில் தான் சல்மான் பட் அந்த கருத்தை கூறி இருக்கிறார்.

கடந்த மாதம் ரமீஷ் ராஜா தனது சேர்மன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, நஜம் சேதி நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.