நான் ஒரு பரிபூரண கேப்டன் கிடையாது;பெருந்தன்மையுடன் கூறிய கேன் வில்லியம்சன் !!

நான் ஒரு பரிபூரணமான கேப்டன் கிடையாது என்று நியூசிலாந்து அணியின் கேப்டன் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனுமான கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

எப்படி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கேப்டன் கூல் என்று அழைக்கப்படுகிறாரோ, அதேபோன்று நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கேப்டன் கால்ம் (captain calm) அழைக்கப்படுவார்.

வெற்றியோ தோல்வியோ அது எதுவாக இருந்தாலும் மிகவும் அமைதியுடனும் நிதானத்துடனும் கையாளும் பக்குவம் படைத்த கேப்டன் என்று அனைவராலும் பாராட்டப்படும் கேன் வில்லியம்சன்,ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக திகழ்கிறார்.

இந்த நிலையில் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சிரித்த முகத்துடன் கையாளும் கேப்டன் கேன் வில்லியம்சன் செய்தியாளர்கள் சந்திப்பில் தான் ஒரு பரிபூரணமான கேப்டன்(perfect captain) கிடையாது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியதாவது, “என்னைப் பொறுத்தவரையில் பரிபூரண கேப்டன் என்று யாரும் கிடையாது, அப்படி ஒருவேளை இருந்தால் நான் பரிபூரண கேப்டன் கிடையாது, கேப்டன் பதவி என்பது ஒரு சவாலான மற்றும் பொறுப்பான வேலையாகும் நமக்கு தோன்றும் யோசனைகளையும், திட்டங்களையும் பயன்படுத்துவதற்கு அது உதவியாக இருக்கும் ஆனால் அது ஒருவரின் கையில் மட்டும் கிடையாது, அனைவருடைய முடிவிலும்தான் உள்ளது. எப்பொழுதும் நான் நம்புவது நம்மை சுற்றி நல்ல மக்கள்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்,அப்பொழுதுதான் நம்முடைய இலக்கை அடைய முடியும். நியூஸிலாந்து அணியில் அது போன்ற வீரர்கள், தலைவர்கள் மற்றும் நண்பர்கள் அதிகம் உள்ளனர், இவர்கள் அனைவருடைய பங்களிப்பும் நியூசிலாந்து அணிக்கு இன்றியமையாததாக இருக்கிறது” என்று கேன் வில்லியம்சன் பேசியுள்ளார்.

இந்த நிலையில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மார்ச் 29ஆம் தேதி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.