ஸ்கூல் பசங்க கூட நல்லா விளையாடுவாங்க… இப்படியே இருந்தீங்கன்னா நெதர்லாந்த் டீம கூட உங்களால ஜெயிக்க முடியாது; பாகிஸ்தான் டீமை விளாசிய கம்ரன் அக்மல் !!

ஸ்கூல் பசங்க கூட நல்லா விளையாடுவாங்க… இப்படியே இருந்தீங்கன்னா நெதர்லாந்த் டீம கூட உங்களால ஜெயிக்க முடியாது; பாகிஸ்தான் டீமை விளாசிய கம்ரன் அக்மல்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மிக மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியை முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்ரன் அக்மல் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. ஆசிய கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் முதல் அணியாக பாகிஸ்தான் அணியே பார்க்கப்பட்டது. பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் பாகிஸ்தான் அணி வலுவானதாக இருப்பதால் பாகிஸ்தான் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என பல முன்னாள் வீரர்களும் எதிர்பார்த்தனர்.

முன்னாள் வீரர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றார்போல் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான முதல் போட்டியில் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை பாகிஸ்தான் அணி ஆல் அவுட் செய்தது. இரு அணிகள் இடையேயான இந்த போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டதால் முடிவு கிடைக்கவில்லை.

இதன்பின் சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டியில் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியது. பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் பாகிஸ்தான் அணியை வச்சு செய்த இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணியின் இந்த படுதோல்வி பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பல முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் அணியை மிக கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில், முன்னாள் பாகிஸ்தான் வீரரான கம்ரன் அக்மல்லும் தன் பங்கிற்கு பாகிஸ்தான் அணியை மிக கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

இது குறித்து கம்ரன் அக்மல் பேசுகையில், “இந்திய அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கில் மிக மட்டமாக விளையாடியது என்பதே உண்மை. பாகிஸ்தான் அணி இதே போன்று விளையாடினால் உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கூட படுதோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்ன செய்கிறது என  புரியவில்லை. பாகிஸ்தான் அணியின் பல வீரர்கள் தங்களது வேலையை சுத்தமாக செய்வது இல்லை என்பதே உண்மை. உண்மையை சொல்ல வேண்டுமெனில் பல பாகிஸ்தான் வீரர்களை விட ஸ்கூலில் படிக்கும் பசங்க கூட நன்றாக விளையாடுவார்களோ என்று தோன்றுகிறது. இஃப்திகார் அஹமத், ஷாதப் கான் போன்ற வீரர்கள் எதற்காக அணியில் இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை” என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.