உலகக்கோப்பை முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி அதில் தோல்வியை சந்தித்துவிட்டாலும் இப்படியொரு வாய்ப்பு இந்திய அணிக்கு இருக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.
50 ஓவர் உலகக்கோப்பை இந்த வருடம் இந்தியாவில் வருகிற அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை கடந்த ஜூன் 27 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி தனது முதல் போட்டியை அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடுகிறது. இப்போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆகிய ஆசிய அணிகளுடன் விளையாடிவிட்டு, பின்னர் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுடன் தொடர்ச்சியாக விளையாடுகிறது.
கிரிக்கெட் உலகமே எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் தாராளமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கலாம். ஆகையால் இங்கே நடத்தப்படுவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து கூறப்பட்டது.
இந்திய அணி ஆரம்பத்தில் பலம்மிக்க ஆஸ்திரேலியா அணியுடன் தொடரை துவங்குகிறது. இது இந்திய அணிக்கு மிகச் சிறந்த விஷயமாகவும் பார்க்க வேண்டும் என்று தனது கருத்தை கூறியுள்ளார் சுனில் கவாஸ்கர். அத்துடன் 1983ஆம் ஆண்டு உலக கோப்பையில் நடந்த சம்பவத்தையும் ஒப்பிட்டு பேசியுள்ளார்.
“இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே பலமிக்க அணியுடன் விளையாடுகிறது. இதில் முடிவுகள் இந்திய அணிக்கு சாதகமாக அமைந்தாலும் அமையவில்லை என்றாலும் நல்லது. நன்றாக விளையாடி வெற்றி பெற்றுவிட்டால் அது கூடுதல் நம்பிக்கையை கொடுக்கும். ஒருவேளை தோல்வியை சந்தித்து விட்டால் ஆரம்பத்திலேயே தங்களது தவறுகளை சரி செய்து கொள்வதற்கு வாய்ப்பாகவும் அமையும்.”
“1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் நாங்கள் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிய எதிர்கொண்டோம். பலம்மிக்க வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி விட்டோம். இது ஒட்டுமொத்த தொடர் முழுவதும் நன்றாக செயல்படுவதற்கு உத்வேகத்தை கொடுத்தது. எப்பேர்ப்பட்ட பலமிக்க அணியையும் வீழ்த்த முடியும் என்கிற நம்பிக்கையை கொடுத்தது.” என்று சுனில் கவாஸ்கர் பகிர்ந்து கொண்டார்.