அடுத்த வருடம் இந்தியாவில் நடக்கும் உலககோப்பையை கைப்பற்றி நாம் தான் ஹீரோக்கள் என்று காட்டுங்கள் என பாகிஸ்தான் வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் சோயிப் அக்தர்.
நடந்து முடிந்திருக்கும் உலகக்கோப்பை டி20 தொடர் பாகிஸ்தான் அணிக்கு சற்று சோகமாகவே முடிந்திருக்கிறது. அரை இறுதிக்கு தகுதி பெறுவதே கடினம் என்ற நிலை இருந்த பாகிஸ்தானுக்கு நெதர்லாந்து அணியின் வெற்றியால் இன்னொரு வாய்ப்பு கிடைத்தது.
அதை அரை இறுதி போட்டியில் சரியாக பயன்படுத்திக் கொண்டு நியூசிலாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால் இறுதிப் போட்டியில் முக்கியமான கட்டத்தில் பாகிஸ்தானின் நட்சத்திர பவுலர் சாகின் அப்ரிடி காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். அப்போது இருந்து ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியது.
இறுதியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று உலகக் கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியது. இறுதி வரை போராடிய பாகிஸ்தான் அணிக்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
அந்த அணியின் பயிற்சியாளர் ஹைடன், “நீங்கள் விளையாடியது சிறப்பாக இருந்தது. தலை நிமிர்ந்து நடங்கள். அடுத்த வருடம் இந்தியாவில் நடக்கும் உலகக்கோப்பை நாம் தான் வெல்வோம்.” என்று நம்பிக்கை அளித்தார்.
அந்த வரிசையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் இதே போன்ற கருத்தை கூறியிருக்கிறார். அவர் கூறுகையில், “அடுத்த வருடம் உலக கோப்பை இந்தியாவில் நடக்கிறது. நீங்கள் ஹீரோக்கள் என்று நிரூபிக்க அதுதான் சரியான தருணம். வான்கடே மைதானத்தில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டியில் கோப்பையை வென்று, யார் என்பதை காட்டுங்கள். உங்களுக்கு இதை நான் சவாலாக சொல்கிறேன்.
உடல் தகுதியை சிறப்பாக வைத்துக்கொண்டு எந்தவித பிரச்சனையும் ஏற்படுத்தாமல் செயல்படுங்கள். நிச்சயம் கோப்பை நமக்குத்தான். நம்மைப் போன்ற பலமான அணி இந்த வருடம் உலகக் கோப்பையிலும் இல்லை. செய்த தவறுகளை மட்டும் என்னவென்று புரிந்து கொண்டு சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்.” என்றார்.
மேலும் பேசிய சோயிப் அக்தர், “இறுதி போட்டி வரை சென்ற உங்களுக்கு ஒட்டுமொத்த நாடும் உறுதுணையாக இருக்கிறது. நீங்கள் செயல்பட்ட விதத்திற்கு வாழ்த்துக்கள். வீணற்ற விமர்சனங்களுக்கு காதுகள் கொடுக்க வேண்டாம்.” என்றும் கூறினார்.