இந்த இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாமல் டி20 தொடரை வெற்றி பெற்றதில் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கிறது மற்றும் பெருமிதமாக இருக்கிறது என போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்திருக்கிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.
இந்தியா – ஆஸ்திரேலியா இரு அணிகள் மோதிய 2வது டி20 போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பின்ச் இடம் பெறாததால் இந்த போட்டியின் கேப்டனாக மேத்தியூ வேட் பொறுப்பேற்றார்.
துவக்க வீரராக இறங்கிய அவர் தனது அதிரடியை வெளிப்படுத்தி 58 ரன்கள் சேர்த்தார். அடுத்ததாக வந்த ஸ்மித் 46 ரன்களும் மேக்ஸ்வெல் 22 ரன்களும் ஹென்றிக்குவஸ் 26 ரன்களும் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலிய அணி 194 ரன்கள் எடுத்தது.
மிகப்பெரிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்த சிக்கர் தவான் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் விராத் கோலி 40 ரன்களும் கேஎல் ராகுல் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கீழ் வரிசையில் இறங்கி அதிரடியை வெளிப்படுத்திய ஹார்திக் பாண்டியா கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார். இவர் 44 ரன்களை 24 பந்துகளில் அடித்திருந்தார். 19.4 ஓவர்களில் இலக்கை எட்டிய இந்திய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று டி20 தொடரை கைப்பற்றியது.
சிறப்பாக பந்துவீசிய நடராஜன் 4 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். போட்டி முடிந்த பிறகு தொடர் வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில்,
“இந்திய அணி ஆடிய விதம் மிக சிறப்பாக அமைந்திருந்தது. ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி அந்த அனுபவத்தில் வந்திருந்ததால் வெற்றி பெற முடிந்தது. நடராஜன் இந்த போட்டியிலும் மிகச் சிறப்பாக பந்து வீசியிருந்தார். இந்திய அணியின் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு வீரர்கள் சிறப்பாக செயல்படுவதால் அடுத்தடுத்த போட்டிகளில் யாரை வெளியே அமர்த்துவது? யாரை உள்ளே எடுத்து வருவது? என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இது ஆரோக்கியமான தலைவலி தான். மிகவும் முக்கியமான இரண்டு வீரர்கள் இல்லாமல் போட்டி சிறப்பானதாகவே அமைத்ததாக கருதுகிறேன். கடந்த சில வருடங்களாக ரோகித் சர்மா மற்றும் பும்ரா இருவரும் மேட்ச் வின்னர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் இல்லாமல் இவர்களை வைத்து வெற்றி பெற்றதை பெருமையாக கருதுகிறேன்.” என மனம் திறந்து பேசி இருந்தார்.