“நான் இந்திய அணியில் ஆட காத்திருக்கிறேன்.. தகுதியானவன்” – கதறும் கேப்டன்!!

நான் இந்திய அணியில் ஆட தகுதியானவன் என்னை எடுக்க ஏன் தயங்குகிறார்கள் என ஐபிஎல் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பேட்டியளித்துள்ளார்.

தற்போது மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ‘ஏ’ அணி வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கு எதிராக அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகின்றனர். ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய ‘ஏ’ அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய ‘ஏ’ அணி வெற்றியை பதிவு செய்துள்ளது. அதிலும் பேட்டிங்கில் ஷ்ரேயஸ் ஐயர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, முதல் போட்டியில் மைதானம் பேட்டிங் ஆடுவதற்கு சாதகமாக இல்லாத சூழ்நிலையிலும், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியபோதும் ஷ்ரேயஸ் ஐயர் நிலைத்து நின்று 77 ரன்கள் அடித்து வெற்றியை உறுதி செய்திருக்கிறார்.

மேலும் உலக கோப்பை தொடருக்கு பின்பு ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணியில் கோலி, பும்ராஹ் மற்றும் தோனி போன்ற முன்னணி வீரர்கள் ஓய்வில் அமர்த்தப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளது. பிசிசிஐ அதற்கான வீரர்களின் பட்டியலை ஜூலை 19ஆம் தேதி வெளியிட இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் 24 வயதான ஷ்ரேயஸ் ஐயர், கடந்த 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி அதே தொடரில் இரண்டு அரைசதங்கள் உட்பட 6 போட்டிகளில் 210 ரன்கள் குவித்தார். அதன் பிறகு தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஓரிரு போட்டிகளில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதற்கு அடுத்ததாக அணியில் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறார்.

இந்திய அணியின் நான்காவது இடத்திற்கு இவர் சரியாக இருப்பார் என்ற பேச்சும் தொடர்ந்து அடிபட்டு வரும் நிலையில், இவரை ஏன் பிசிசிஐ தொடர்ந்து மறுத்து வருகிறது என்ற கேள்விகளும் எழுகின்றன.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு பத்திரிகையாளர்களுடன் பேட்டி அளித்த அவர் கூறுகையில், “நான் இந்திய அணியில் ஆடுவதற்கு தயாராக இருக்கிறேன். முழு உடல் தகுதி மற்றும் மனதளவிலும் நான் இந்திய அணிக்காக ஆட தயாராக இருக்கிறேன். நெருக்கடியான தருணங்களில் என்னால் சிறப்பாக செயல்பட முடியும். எனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்தால், இந்த தொடரில் நிச்சயம் மிகச் சிறப்பாக செயல்படுவேன்” என்றார்

Prabhu Soundar:

This website uses cookies.