பாகிஸ்தான் அணியை உலகின் சிறந்த கிரிக்கெட் அணியாக உருவாக்குவேன் என பிரதமர் இம்ரான் கான் சபதம் மேற்கொண்டுள்ளார்.
உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. தொடரின் துவக்கத்தில் குறைந்த பட்சம் அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் போட்டியிலேயே வெறும் 105 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணியிடம் வழக்கம்போல மோசமான தோல்வியை கண்டது. ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியின் விளிம்புவரை சென்று வெற்றி பெற்றது. இறுதியில், பாகிஸ்தான் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தவற விட்டு விட்டு வெளியேறியது.
உலககோப்பைக்கு முன்பாகவே அணியில் பல சர்ச்சைகள் நிகழ்ந்தன. நல்ல பார்மில் இருந்த ஜுனைட் கான் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சரியாக தடுமாறி வந்த வாஹப் ரியாஸ் அணியில் சேர்க்கப்பட்டார். அதேபோல, ஹபீஸ் அணியில் சேர்க்கப்பட்டது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறியதால், அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சில தினங்களுக்கு முன்பு தெரிவித்தார். 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த இம்ரான் கான் தற்போது பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.
அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இவர் பாகிஸ்தான் மக்கள் வசிக்கும் பகுதியில் பேசியபோது, “உலகின் சிறந்த கிரிக்கெட் அணியாக அடுத்த உலகக் கோப்பைக்குள் பாகிஸ்தான் அணியை நான் உருவாக்குவேன். அடுத்த சில வருடங்களுக்கு இதுவே எனது முதல் கடமை. அரையிறுதிக்கு தகுதி பெறாமல் பாகிஸ்தான் அணி வெளியேறியபோது ரசிகர்கள் வருத்தப்பட்டதை என் கண்கூடே காண நேர்ந்தது.
ஒரு கிரிக்கெட் வீரனாக எனக்கும் இது மிகவும் வருத்தம் அளிக்க கூடியதாக இருந்தது. கிரிக்கெட் அணியை எந்த அளவிற்கு வைத்துள்ளார்கள் என்பதை புரிந்துகொண்டேன். இதனால், தற்போது சூளுரை மேற்கொள்கிறேன். பாகிஸ்தான் அணி அடுத்த உலகக் கோப்பைக்குள் தலைசிறந்த அணியாக இருக்கும்” என்றார்.