இன்னும் 10 வருடங்களில் சிஎஸ்கே அணியில் தோனியின் கதி என்ன? – அணியின் அதிகாரி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
இன்னும் பத்து வருடங்கள் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி எப்படிப்பட்டவராக இருப்பார் என அதன் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டவர் மகேந்திர சிங் தோனி. அதற்கு முந்தைய வருடம் தோனி, 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை முதன்முறையாக கேப்டன் பொறுப்பேற்று இந்திய அணிக்காக பெற்றுத் தந்திருந்தார்.
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் ஐபிஎல் தொடர்களில் இறுதிப்போட்டி வரை சென்றது. பின்னர் 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக கோப்பையை தட்டிச் சென்றது. மேலும் இரண்டு முறை சாம்பியன்ஸ் டிராபி டி20 லீக் தொடரையும் கைப்பற்றியது.
2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூதாட்ட புகாரின் காரணமாக, 2016, 2017 இரண்டு ஆண்டுகள் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இரு அணிகளும் தடைசெய்யப்பட்டன. தடைக்காலம் முடிந்து மீண்டு வந்த அதே வருடமே சென்னை அணிக்காக மூன்றாவது முறையாக கோப்பையை பெற்றுத்தந்தார் தோனி.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக முக்கிய பங்காக தோனி திகழ்ந்து வருகிறார். ஏற்கனவே தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்காக ஆடுவதில்லை. இந்த நிலையில் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால், இன்னும் 10 ஆண்டுகள் கழித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி எப்படிப்பட்டவராக இருப்பார் என அதன் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “இன்னும் 10 வருடங்களில் நிச்சயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பாஸாக தோனி இருப்பார். எனக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி ஒரு இணக்கமான தொடர்புடன் தோனி இருக்கிறார். அணி வீரர்களிடம் எப்படி சிறந்த ஆட்டத்தை பெறுவது என அவர் நன்கு அறிவார். அதேபோல் அடுத்த தலைமுறையில் வீரர்களை அணிக்கு எப்படி எடுக்கவேண்டும் என்றும் தெரிந்தவர்.” என்றார்.