2-1ன்னு ஜெயிச்சிட்டோம்.. அந்த ஒரு சம்பவம் மட்டும் நடக்கலைன்னா இந்நேரம் 2-1ன்னு தோத்துருப்போம் – வெற்றிக்கான காரணத்தை கூறிய ரோகித் சர்மா!

இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதற்கான முக்கிய காரணம் இதுதான் என்று தனது பேட்டியில் குறிப்பிட்டு பேசியுள்ளார் ரோகித் சர்மா.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் முடிவுற்றிருக்கிறது. இதில் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவில், இரண்டு போட்டிகளை இந்திய அணியும் ஒரு போட்டியை ஆஸ்திரேலிய அணியும் வென்று, 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையும் வகித்தது.

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் அடித்தது. அதனை பின்தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு சுப்மன் கில்(128) மற்றும் விராட் கோலி(186) இருவரும் அபாரமாக விளையாடி சதம் அடித்ததால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 571 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. 91 ரன்கள் முன்னிலையும் பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த ஆஸி., அணி 4ம் நாள் முடிவில் 3/0 என இருந்தது.

இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தில் பேட்டிங்கை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி நிதானமாக இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டது. டிராவிஸ் ஹெட் 90 ரன்கள் அடித்து அவுட்டானார். லபுஜானே 63 ரன்கள், ஸ்மித் 10 ரன்கள் அடுத்து களத்தில் இருந்தனர். 175/2 என இழந்திருந்தபோது, ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவடைய சுமார் 15 ஓவர்கள் மீதம் இருந்தன. அப்போது இரு அணி கேப்டன்களும் போட்டியை முடித்துக்கொள்ள சமாதானத்திற்கு வந்தனர். ஆகையால் இப்போட்டி டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

தொடரை 2-1 என வென்ற இந்திய அணி, தொடர்ந்து நான்காவது முறையாக (2017-2023) பார்டர் கவாஸ்கர் டிராபியை கைப்பற்றி புதிய வரலாறு படைத்திருக்கிறது.

கோப்பையை கைப்பற்றியபோது கேப்டன் ரோகித் சர்மா பேட்டியளித்தார். அப்போது இந்திய அணி 2-1 என தொடரை கைப்பற்றுவது முக்கிய காரணமாக அமைந்தது எது? என்று கூறினார். அவர் பேசியதாவது:

 

“இது சிறப்பான தொடராக அமைந்தது. தொடரின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஆர்வம் குறையவே இல்லை. இந்த தொடரில் நிறைய வீரர்கள் முதல்முறையாக பார்டர் கவாஸ்கர் டிராபி விளையாடினார்கள்.” என ரோகித் சர்மா பேசினார்.

பிறகு வெற்றிக்கான காரணத்தை பற்றி பேசிய ரோகித் சர்மா, “இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கும் எதிரணிக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை நன்கு உணர்ந்திருந்தோம். ஆகையால் வழக்கத்தை விட அதிக அளவில் கடின உழைப்பை கொடுத்தோம். குறிப்பாக டெல்லி டெஸ்ட் போட்டியை நினைத்து நான் இன்றளவும் பெருமிதமாக உணர்கிறேன். மிகப்பெரிய பின்னடைவில் இருந்தோம். அந்த தருணத்தில் வீரர்கள் பொறுப்பாக விளையாடியது இந்திய அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தது. அதுதான் இந்த தொடரையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது.” என்றார்.

“இந்தூர் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியினர் மிகப்பெரிய அழுத்தத்தை எங்களுக்கு கொடுத்தார்கள். டெஸ்ட் போட்டியின் அழகே அதுதான். எப்போது யாரிடமிருந்து சிறப்பான ஆட்டம் வெளிப்படும் என்று கூறவே முடியாது. ஆஸி., அணியினர் சிலர் அபாரமாக செயல்பட்டார்கள். ஒட்டுமொத்தமாக இந்திய அணி தொடரை கைப்பற்றி கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருநாள் தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.” என்றும் ரோகித் சர்மா கூறினார்.

Mohamed:

This website uses cookies.