இவனுகள நம்பி இனி எந்த பிரயோஜனும் இல்லை… பாதி பேர டீம்ல இருந்து தூக்கிடுங்க; விரேந்திர சேவாக் காட்டம்
அடுத்த டி20 உலக கோப்பையிலாவது சீனியர் வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று விரேந்தர் சேவாக் தெரிவித்துள்ளார்.
இருதரப்பு தொடரில் புலியை போல் பாயும் இந்திய அணி, ஐசிசியால் நடத்தப்படும் உலகக்கோப்பை தொடர் போன்ற முக்கிய போட்டிகளில் வழக்கம் போல் மண்ணைக் கவ்வியது.
குறிப்பாக நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை தொடரிலும் அரை இறுதி சுற்று வரை முன்னேறிய இந்திய அணி, இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி பரிதாபமாக வெளியேறியது. தொடர் துவங்குவதற்கு முன்பு கோப்பை நமக்குத்தான் என்று வாய் சவடால் விட்ட இந்திய அணி, தற்போது ரசிகர்கள் உட்பட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது.
ஓரளவிற்கு போராடி தோல்வியை தழுவியிருந்தாலும் இந்திய ரசிகர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள். ஆனால் நெருக்கடியை ஒரு சதவீதம் கூட சமாளிக்க முடியாமலும், சீனியர் வீரர்களின் பங்களிப்பு சுத்தமாக இல்லாததன் காரணமாகவும் இந்தியா அணி மிக மோசமான முறையில் தோல்வியை தழுவியதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
சமகால கிரிக்கெட்டின் வலுவான அணியாக இந்திய அணி இருந்தும் ஐசிசி., தொடர்களில் தொடர்ந்து சொதப்புவி வருவதற்கான சரியான காரணமே தெரியாததால், முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை அள்ளி வீசி வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் விரேந்தர் சேவாக் அடுத்த உலக கோப்பை தொடரில் கட்டாயம் இந்திய அணியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
இது குறித்து சேவாக் தெரிவித்ததாவது, “அணியின் எண்ணத்திலோ அல்லது வேறு எதோ மாற்றம் கொண்டுவர வேண்டுமென்று நான் கூறவில்லை, ஆனால் நிச்சயம் அணி வீரர்களின் மாற்றம் கொண்டு வர வேண்டும். அடுத்த உலகக் கோப்பை தொடரில் நிச்சயம் முன்பு பார்த்த சில முகங்கள் இருக்கக் கூடாது, 2007 உலகக் கோப்பை தொடரில் இதே முறைதான் கையாளப்பட்டது, இந்திய அணிக்காக விளையாடிய அனுபவம் வாய்ந்த பல வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை, அங்கு இளம் வீரர்கள் மட்டுமே சென்று விளையாடினார்கள். இதனால் அவர்களை யாரும் நம்பவே கிடையாது இதனால் அவர்கள் நெருக்கடி இல்லாமல் விளையாடி கோப்பையையும் வென்றனர். அடுத்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெறும் என்று நம்ப போவது கிடையாது, ஆனால் அந்த அணி எதிர்கால இந்திய அணியை கட்டமைக்க கூடியதாக இருக்க வேண்டும், எதிர்காலத்திற்காக தயாராக வேண்டும் என்றால் தற்போது இருந்தே அதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்த சேவாக் அடுத்த டி.20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளது, இதில் சரியாக பங்களிக்காத சீனியர் வீரர்களை அணியிலிருந்து நீக்கி இளம் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்க வேண்டும்” என்று வெளிப்படையாகவே தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.