தயவு செஞ்சு உங்க வேலைய மட்டும் பாருங்க… மத்தத நாங்க பாத்துக்கிறோம்; கடுப்பான ரோஹித் சர்மா !!

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டி நாளை (16-2-22) நடைபெற உள்ளது.

விண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி மிக இலகுவாக கைப்பற்றியிருந்தாலும், முன்னாள் கேப்டனான விராட் கோலி ஒரு போட்டியில் கூட சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள், இந்நாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் விராட் கோலியின் சொதப்பல் ஆட்டம் குறித்தான தங்களது கருத்துக்களை வெளிப்படுத்துவதோடு, விராட் கோலிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.

ஒட்டுமொத்த கிரிக்கெட் வல்லுநர்களும் விராட் கோலியின் மோசமான ஆட்டம் குறித்தே பேசி வரும் நிலையில், இந்திய அணியின் புதிய கேப்டனான ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

விண்டீஸ் அணியுடனான முதல் டி.20 போட்டி நாளை (16-2-22) நடைபெற உள்ள நிலையில், இதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு செய்தியாளர்களின் பல்வேறு கேள்விக்கு பதிலளித்த இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலியின் சொதப்பல் பேட்டிங் குறித்தான கேள்விக்கு சற்று காட்டமாகவே பதில் கொடுத்துள்ளார்.

விராட் கோலி குறித்தான கேள்விக்கு பதிலளித்த ரோஹித் சர்மா, மீடியா தான் இதை கிளப்பி விடுவதே.. நீங்கள்(மீடியா) அமைதியாக இருந்தால், அதுவே கோலிக்கு போதும். அவர் எப்படி ஆடவேண்டும் என்பதை அவரே பார்த்துக்கொள்வார். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவரும் விராட் கோலிக்கு, அழுத்தங்களை எப்படி கையாள வேண்டும் என்பது நன்றாகவே தெரியும் என்று தெரிவித்தார்.

Mohamed:

This website uses cookies.