தலைவலியை கொடுத்த ஆப்கன் பேட்ஸ்மேன்கள்…இந்தியாவுக்கு சிக்கலான இலக்கு!

இந்தியா-ஆப்கானிஸ்தான் லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 273 ரன்கள் இலக்கை இந்தியாவிற்கு நிர்ணயித்திருக்கிறது ஆப்கனிஸ்தான் அணி.

உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இரு அணிகளும் மோதிய போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் இருவரும் களம் இறங்கினர். இதில் குர்பாஸ் நிதானமாக விளையாட இப்ராஹிம்(22) அதிரடியாக விளையாடினார். ஆனால் அவரது விக்கெட்டை பும்ரா தூக்கினார். அடுத்து வந்த ரஹ்மத் 16 ரன்களுக்கு அவுட் ஆனார்.

ஷாஹிதி உள்ளே வந்து தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கினார். அப்போது துவக்க வீரர் குர்பாஸ் 21 ரன்களுக்கு வெளியேறினார். பின்னர் வந்த அஸ்மதுல்லா உள்ளே இருந்த ஷாஹிதி உடன் ஜோடி சேர்ந்து இந்திய அணிக்கு தலைவலியை கொடுத்தார்.

இந்த ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்து உலககோப்பையில் வரலாறு படைத்தது. இதில் அஸ்மதுல்லா 4 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உட்பட 62 ரன்கள் அடித்து வெளியேறினார். இவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்துவந்த ஷாஹிதி 1 சிக்ஸ் மற்றும் 8 பவுண்டரிகள் உட்பட 80 ரன்கள் அடித்து அணியை நல்ல ஸ்கொருக்கு எடுத்து செல்ல உதவினார்.

பின்னர் வந்த கீழ் வரிசை வீரர்கள் நபி 19 ரன்கள், ரஷீத் கான் 16 ரன்கள் என அடித்துக் கொடுக்க ஆப்கானிஸ்தான் அணி 250 ரன்களை கடந்தது. அபாரமாக பந்துவீசிய நட்சத்திர வீரர் பும்ரா நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இன்று பிறந்தநாள் காணும் ஹார்திக் பாண்டியா இரண்டு விக்கெட்டுகளை தனது பங்கிற்கு கைப்பற்றினார்.

இறுதியாக ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் அடித்தது.

டெல்லி அருண் ஜெட்லீ மைதானம் பேட்டிங் செய்ய சிறந்ததாக இருக்கும். இதற்கு முன்பு இங்கே நடந்த தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி அதிகபட்ச ஸ்கோர் அடித்த போட்டியாக இருந்தது. ஆகையால் இந்திய அணி இந்த இலக்கை சேஸ் செய்து விடுமா? அல்லது ஆப்கானிஸ்தான் அணியின் சுழல் பந்துவீச்சாளர்கள் தடுமாற வைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Mohamed:

This website uses cookies.