ரோஹித் சர்மா, விராட் கோலி இல்லேனாலும் இந்திய அணிக்கு ஒரு பிரச்சனையும் இல்லேனு இப்ப எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்; கவுதம் கம்பீர் அதிரடி பேச்சு
இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை மட்டுமே முழுமையாக சார்ந்து இல்லை என்பதை கே.எல் ராகுல் நிரூபித்து வருவதாக முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் தனது முதல் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்பின் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா உள்ளிட்ட மூன்று முக்கிய வீரர்கள் டக் அவுட்டாகி பெரும் ஏமாற்றத்தை கொடுத்தாலும், விராட் கோலி மற்றும் கே.எல் ராகுலின் மிக மிக சிறப்பான பேட்டிங்கின் மூலம் இலக்கை 41வது ஓவரில் இலக்கை எட்டிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி அபார வெற்றியும் பெற்றது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணியின் இந்த மிரட்டல் வெற்றி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதால், முன்னாள், இந்நாள் வீரர்கள் என பலரும் இந்திய அணியின் இந்த வெற்றி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் இந்திய வீரரான கவுதம் கம்பீர், இந்திய அணி விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை மட்டுமே முழுவதுமாக நம்பி இல்லை என்பதை கே.எல் ராகுல் நிரூபித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து கவுதம் கம்பீர் பேசுகையில், “ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்திய அணியின் இந்த வெற்றி மிக சிறப்பானது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி வெறும் ஓரிரு வீரர்களை மட்டுமே முழுமையாக சார்ந்து இல்லை என்பது என்பது இப்போது அனைவருக்கும் புரிந்திருக்கும். கே.எல் ராகுல் அணிக்கு திரும்பியதில் இருந்தே மிக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருவதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது. கே.எல் ராகுல் எப்படிப்பட்ட அழுத்தத்தையும் சமாளித்து விளையாடுவது அவரது தனிச்சிறப்பு” என்று தெரிவித்தார்.