டி.20 போட்டியில் இருந்து திடீரென விலகிய விராட் கோலி… துவக்க வீரர் யார்..? ராகுல் டிராவிட் வெளியிட்ட தகவல்
ஆஃப்கானிஸ்தான் அணியுடனான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதாக பயிற்சியாளரான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையேயான டி.20 தொடர் 11,14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
கடந்த டி.20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு டி.20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து புறக்கணிகப்பட்டு வந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆஃப்கானிஸ்தான் அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தனர்.
இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையேயான முதல் டி.20 போட்டி நாளை (11-1-24) நடைபெற இருக்கும் நிலையில், முதல் டி.20 போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார். தனிப்பட்ட சில காரணங்களுக்காக விராட் கோலி முதல் டி.20 போட்டிக்கான அணியில் இருந்து விலகியுள்ளதாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
முதல் டி.20 போட்டியில் இருந்து விலகியுள்ள விராட் கோலி, இரண்டாவது டி20 போட்டிக்கு முன்பு மீண்டும் இந்திய அணியில் இணைவார் என்றும் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் தொடரில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்க போவது யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல் டிராவிட், தற்போதைய நிலவரத்தின் படி, ரோஹித் சர்மாவும், யசஸ்வி ஜெய்ஸ்வாலும் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள். விராட் கோலி துவக்க வீரராக களமிறக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகமாக உள்ளதை நானும் பார்த்து வருகிறேன். அவருக்கான கதவும் அடைக்கப்படவில்லை. அணியின் தேவைக்கு ஏற்ப விராட் கோலி களமிறக்கப்படுவார்” என்று தெரிவித்தார்.