பென் ஸ்டோக்ஸை விட இந்த இந்திய வீரர் தான் எப்பவும் மாஸ்… இந்திய வீரரை பாராட்டி பேசிய ஆகாஷ் சோப்ரா
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா தான் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல் ரவுண்டர் என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.
ஆஸ்திரேலிய அணியுடனான தொடருக்கு பின் இந்திய அணி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. உலகக்கோப்பை தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற இருப்பதால் இந்திய அணி இந்த முறையாவது கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்பும் முன்னாள் இந்திய வீரர்கள் பலர், இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், எதிர்வரும் ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடர் மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜா தான் சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல் ரவுண்டர் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “ரவீந்திர ஜடேஜா சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த ஆல் ரவுண்டர். பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணிக்கு வலு சேர்த்து வருகிறார். 7வது இடத்தில் பேட்டிங் செய்யும் ஒருவர் ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்களும் வீசுவது சாதரண விசயம் கிடையாது. டெஸ்ட் போட்டிகளை எடுத்து கொண்டால் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் நம்பர் 1 ஆல் ரவுண்டர் மட்டும் கிடையாது, சமகால கிரிக்கெட்டின் நம்பர் 1 ஆல் ரவுண்டர். இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸை விட ரவீந்திர ஜடேஜா தான் டெஸ்ட் போட்டிகளில் மிக சிறந்த வீரர். ஏனெனில் பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக பந்துவீச மாட்டார், ஆனால் ஜடேஜா அனைத்து வகையிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை செய்து கொடுத்து வருகிறார்”என்று தெரிவித்தார்.