பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா; நாளை இரண்டாவது ஒருநாள் போட்டி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 டி-20 மற்றும் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான டி-20 தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இந்தியா உள்ளது.
இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை(மார்ச் 5) நடைபெற உள்ளது. முதல் போட்டியைப் போலவே இந்த போட்டியிலும் இந்திய அணியின் அதிரடி தொடருமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியாவின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டும் சமபலமாக உள்ளது. வெற்றி பெற்ற அணி என்பதால் நாளைய போட்டிக்கான அணியில் கேப்டன் விராட் கோலி எந்த மாற்றமும் செய்ய மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் ஆஸ்திரேலிய அணி உள்ளது. முதல் போட்டி நடந்த தவறுகளை திருத்திக்கொண்டு இந்தப் போட்டியில் மீண்டு வர புதிய வியூகம் வகுத்து வருகிறது ஆஸ்திரேலியா.
நாக்பூர் மைதானத்தில் கடைசி 5 போட்டிகளில் இந்தியா 4-லும், ஆஸ்திரேலியா ஒன்றிலும் வெற்றி பெற்றுள்ளது. 2007-ம் ஆண்டுக்குப்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்த மைதானத்தில் இந்தியா தோற்றது இல்லை. அதனால், இந்த மைதானத்தில் இந்தியாவின் ஆதிக்கம் இருக்கும் என தெரிகிறது.
இரண்டாவது போட்டிக்கான உத்தேச இந்திய அணி;
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோஹ்லி, கே.எல் ராகுல், அம்பத்தி ராயூடு, தோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர், ஜஸ்ப்ரிட் பும்ராஹ், முகமது ஷமி, குல்தீப் யாதவ்.