சும்மா பேருக்கு தான் எடுத்திருக்காங்க…. அஸ்வினுக்கு ஆடும் லெவனில் கண்டிப்பா இடம் கிடைக்காது; அமித் மிஸ்ரா உறுதி
ஆஸ்திரேலிய அணியுடனான ஓருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான அமித் மிஸ்ரா ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான போட்டிகள் 22,24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, திலக் வர்மா, ரவிச்சந்திர அஸ்வின் போன்ற வீரர்களுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு ரவிச்சந்திர அஸ்வினுக்கு அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதனால் அஸ்வினுக்கு மீண்டும் இந்திய அணியில் இடம் கொடுக்கப்பட்டது குறித்தான தங்களது கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலர் ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான அமித் மிஸ்ராவும், ரவிச்சந்திர அஸ்வினுக்கு இந்திய அணியில் மீண்டும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது குறித்தான தனது கருத்தை ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அமித் மிஸ்ரா பேசுகையில், “ரவிச்சந்திர அஸ்வின் மிக சிறந்த பந்துவீச்சாளர் என்பதில் சந்தேகமே இல்லை. அவரால் இலகுவாக விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுக்க முடியும். ஆனால் அஸ்வினுக்கு 20 போட்டிகளுக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை, 50 ஓவர் போட்டிகளுக்கான அணியில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும். இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர்களாக இருக்கும் யாராவது ஒருவருக்கு காயம் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்பதற்காகவே இந்திய அணி மீண்டும் ரவிச்சந்திர அஸ்வினுக்கு அணியில் இடம் கொடுத்துள்ளது என்றே கருதுகிறேன். அஸ்வினுக்கு இந்திய அணியில் இடம் மறுக்கப்படுவதற்கான காரணம் அவரது பீல்டிங்கும், அவர் வலுது கை பேட்ஸ்மேனாக இருப்பதும் தான். இந்திய அணியில் அவருக்கு போட்டியாக இருக்கும் அக்ஷர் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடது கை பேட்ஸ்மேன்களாக இருப்பதோடு, பீல்டிங்கிலும் மிக சிறப்பாக செயல்படுகின்றனர். இதன் காரணமாகவே அஸ்வினை விட ஜடேஜா மற்றும் அக்ஷர் பட்டேலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.