எங்களது காலத்தில் விராட் கோலி பேட்டிங் செய்திருந்தால், 70 செஞ்சுரிகளை கட்டாயம் எட்டியிருக்க மாட்டார் என்று கருத்து தெரிவித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் லெஜன்ட் சோயிப் அக்தர்.
சர்வதேச கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவராக திகழ்ந்துவரும் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் எண்ணற்ற பல சாதனைகளை படைத்திருக்கிறார்.
ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு இணையாக மற்றும் அவரது பல சாதனைகளை முறியடிக்கக்கூடிய தகுதி உள்ளவராக ஒரே வீரராக விராட் கோலி பார்க்கப்பட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக, சச்சின் அடித்திருக்கும் 100 சர்வதேச சதங்களை நெருங்கக்கூடிய வாய்ப்பு விராட் கோலிக்கு மட்டுமே இருக்கிறது. ஒட்டு மொத்தமாக அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் 46 சதங்கள், டெஸ்ட் போட்டிகளில் 28 சதங்கள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு சதம் என மொத்தம் 75 சர்வதேச சதங்களை இதுவரை அடித்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக 25 ஆயிரம் ரன்கள் கடந்து விளையாடி வருகிறார். விராட்கோலி, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே 13,000 ரன்களை நெருங்கி வருகிறார். இதில் 64 அரைசதங்கள் மற்றும் 46 சதங்கள் அடங்கும்.
ஒருநாள் போட்டிகளில் மட்டும், அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில், சச்சின் டெண்டுல்கர் 49 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார். 46 சதங்களுடன் 2வது இடத்தில் இருக்கும் விராட் கோலி, இன்னும் மூன்று சதங்கள் அடித்து விரைவில் இந்த சாதனையை முறியடிப்பார் என பார்க்கப்படுகிறது.
இப்படி சதங்களில் மட்டும் எண்ணற்ற பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கும் விராட் கோலியை, எங்களது காலத்தில் பேட்டிங் செய்திருந்திருந்தால் விராட் கோலியால் இத்தனை சதங்களை நெருங்கியிருக்க முடியாது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் சோயிப் அக்தர்.
“வக்கார் யூனிஸ், வாஷிம் அக்ரம் மற்றும் நான் ஆகிய மூவரும் சிறந்த பார்மில் இருந்தபோது விராட் கோலி பேட்டிங் செய்திருந்தால், கண்டிப்பாக இத்தனை சதங்களை அடித்திருக்க முடியாது. நினைத்து பார்த்திருக்கவும் முடியாது.
போட்டியின் நடுவே, விராட் கோலியை வம்புக்கு இழுத்திருப்போம். அவர் பஞ்சாபி என்பதால், கண்டிப்பாக இதற்கு பதில் கொடுக்க முயற்சித்து இருப்பார். இதனால் மனதளவில் அவருக்கு குழப்பங்கள் வந்திருக்கும். இத்தனை சதங்களை அடித்திருக்க முடியாது.
ஆனால் விராட் கோலி தனது திறமைக்கு 30-35 சதங்களை அடித்திருக்க கூடும். இத்தனை சதங்களை வைத்து தலைசிறந்த வீரர் என்ற பெயரும் இவருக்கு கிடைத்திருக்க வாய்ப்புகள் குறைவு.
34 வயதில் இருக்கும் விராட் கோலி நல்ல உடல்நிலையுடன் இருக்கிறார். இன்னும் குறைந்தது 7-8 வருடங்கள் விளையாடலாம். அதற்குள் இன்னும் நிறைய சதங்களை அடித்து சச்சினின் 100 சதங்கள் சாதனையை முறியடிக்க நிறைய வாய்ப்புள்ளது. ஓய்வு பெறும்முன், 110 சதங்களை கூட அடித்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது.” என்றார்.