இந்திய அணி சாம்பியன் பட்டம் ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கது உண்மை தான்… ஆனா…? மைக்கில் கிளார்க் ஓபன் டாக்
ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான மைக்கெல் கிளார்க் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், தற்போது இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது.
மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை 5 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இந்தியா உள்ளிட்ட அணிகள் தங்களது எதிரணிகளை இலகுவாக வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.
உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருவதால் சாம்பியன் பட்டம் வெல்ல மற்ற அணிகளை விட இந்திய அணிக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணியும், இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்கா அணியும் விளையாடிய விதத்தை வைத்து இந்திய அணிக்கு அவ்வளவு இலகுவாக சாம்பியன் பட்டம் கிடைத்துவிடாது என்பது உறுதியானது.
இந்தநிலையில், இது குறித்து பேசியுள்ள முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான மைக்கெல் கிளார்க், சாம்பியன் பட்டம் வெல்ல இந்திய அணிக்கு வாய்ப்பு அதிகம் உள்ளது தான் என்றாலும், சாம்பியன் பட்டம் இந்திய அணிக்கு இலகுவாக கிடைத்துவிடாது என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து மைக்கெல் கிளார்க் பேசுகையில், “உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுவது இந்திய அணிக்கு கூடுதல் பலம் தான். இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்துவது எளிதான விசயம் இல்லை என்பதால், உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்கு இந்திய அணிக்கே வாய்ப்பு அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் சாம்பியன் பட்டம் இந்திய அணிக்கு இலகுவாக கிடைத்துவிடாது. இந்திய அணியில் திறமை மற்றும் அதிக அனுபவம் உள்ள பல வீரர்கள் உள்ளனர், இதுவே இந்திய அணியின் பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும், இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்றால் அதற்காக இந்திய அணி கடுமையாக போராட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். கடுமையான போட்டிகளை இந்திய அணி நிச்சயமாக எதிர்கொள்ளும்” என்று தெரிவித்தார்.