மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் எட்டு விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார் நேதன் லயன்.
இந்தூர் மைதானத்தில் பார்டர் கவாஸ்கர் டிராஃபியின் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. அடுத்ததாக முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 88 ரன்கள் பின்தங்கி இருந்தது.
இதனையடுத்து மிகப்பெரிய ஸ்கொரை எட்டினால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்ற நோக்கில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா அணியின் சுழல் பந்துவீச்சாளர் நேதன் லயன் மிகப்பெரிய அச்சுறுத்தலை கொடுத்தார். இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்த இன்னிங்சில் விழுந்த 10 விக்கெட்டுகளில் 8 விக்கெட்டுகளை நேதன் லயன் கைப்பற்றினார். இதன் மூலம் இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மற்றும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர்களில் பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.
நேதன் லயன், இந்தியாவிற்கு எதிராக அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் முத்தையா முரளிதரன் இடத்தை பின்னுக்குதள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் 139 விக்கெட்டுகளுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் இருக்கிறார்.
பார்டர் கவாஸ்கர் டிராஃபியில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரராக அணில் கும்ப்ளே 111 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் இருந்தார். இந்த தொடரில் மூன்று போட்டிகளில் 19 விக்கெட்டுகளை கைப்பற்றிய நேதன் லயன், அனில் கும்ப்ளேவின் சாதனையை முறியடித்துள்ளார். மொத்தம் 112 விக்கெட்டுகள் கைப்பற்றி முதல் இடத்தில் இருக்கிறார்.
இந்த பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 106 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஹர்பஜன்சிங் 95 விக்கெட்களுடன் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
பார்டர் கவாஸ்கர் டிராஃபியில் அதிக விக்கெட் எடுத்த பவுலர்கள்:
1. நேதன் லயன் – 112 விக்கெட்டுகள்
2. அனில் கும்ப்ளே – 11 விக்கெட்டுகள்
3. அஸ்வின் – 106 விக்கெட்டுகள்
4. ஹர்பஜன் சிங் – 95 விக்கெட்டுகள்
5. ரவீந்திர ஜடேஜா – 84 விக்கெட்டுகள்