விராட் கோலியின் அணுகுமுறை, சேவாக்கின் பவர் மற்றும் தைரியம் கலந்த கலவையாக இந்திய துவக்க வீரர் சுப்மன் கில் இருக்கிறார் என்று புகழாரம் சூட்டியுள்ளார் சஞ்சய் மஞ்ரேக்கர்.
இளம் துவக்க வீரர் சுப்மன் கில், இந்தியா அணிக்கு பேட்டிங் செய்து வரும் விதத்தை பார்க்கையில், தனது ஃபார்மின் உச்சத்தில் இருக்கிறார் என்று கூறலாம். ஏனெனில் இந்த 2023ல் இதுவரை ஐந்து சதங்கள் அடித்திருக்கிறார். அதில் ஒரு இரட்டை சதம் அடங்கும்.
ஒருநாள் போட்டிகளில் ஒரு இரட்டை சதம் மற்றும் இரண்டு சதங்கள், டி20 போட்டிகளில் ஒரு சதம், சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் ஒரு சதம் என்று விளாசி இருக்கிறார். 2022 டிசம்பர் மாதம் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் சதத்தை அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரது பேட்டிங்கை புகழாத ஆளே இல்லை என்ற அளவிற்கு பலரையும் தனது அபாரமான பேட்டிங் மூலம் பேச வைத்திருக்கிறார். இதற்கிடையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர், சேவாக் மற்றும் விராட் கோலி உடன் ஒப்பிட்டு இருவரும் கடந்த கலவையாக சுப்மன் கில் பேட்டிங் இருக்கிறது என புகழ்ந்த தள்ளியுள்ளார்.
“டெஸ்ட் போட்டிகளில் சுப்மன் கில் வைத்திருக்கும் டெக்னிக் மிகவும் பிடித்திருக்கிறது. தனது காலை நன்றாக முன்னே எடுத்து வந்து பந்துகளை அணுகுகிறார். சில பந்துகளை நன்றாக பின்னே சென்று அணுகுகிறார். இந்த இளம் வயதில் மிகச்சிறந்த திறமைகளை வைத்திருக்கிறார். இந்த டெக்னிக்கை வைத்துக்கொண்டு நீண்ட காலம் டெஸ்ட் போட்டிகளில் நீடிக்கலாம். அது மட்டுமல்லாது பல உச்சத்தையும் அடையலாம்.
லிமிடெட் ஓவர் போட்டிகளிலும் இவரது அணுகுமுறை எனக்கு சில நேரங்களில் விராட் கோலியை போல தெரிகிறது. அத்துடன் 90களில் மற்றும் 190களில் இருக்கும்பொழுது சிக்ஸர் அடித்து அதை சதங்களாக மாற்றுகையில் வீரேந்திர சேவாக்கின் தைரியம் மற்றும் பவர் தெரிகிறது.” என்றார்.