விராட் கோலி, ஹர்திக் பாண்டியா இல்லை… ரோஹித் சர்மாவிற்கு அடுத்து இந்திய அணிக்கு இவர் தான் ரொம்ப முக்கியம்; ஹர்பஜன் சிங் சொல்கிறார்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று துவங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள உள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்த முறை இந்தியாவில் நடைபெற இருப்பதால், இந்திய அணியே இந்த முறை சாம்பியன் பட்டத்தை வெல்லும் என நம்பப்படும் நிலையில், சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், “சூர்யகுமார் யாதவ் உலகக்கோப்பை தொடரில் எப்படி செயல்பட போகிறார் என்பதை பார்க்க மிகுந்த ஆவலுடன் காத்துள்ளேன். நிச்சயமாக சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இருப்பார் என கருதுகிறேன். சூர்யகுமார் யாதவ் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கிவிட்டால் அவரை கட்டுப்படுத்துவது சாதரண விசயமாக இருக்காது. சூர்யகுமார் யாதவ் வெறும் ஒரு போட்டியை வென்று கொடுப்பவர் அல்ல, அவரால் ஒரு தொடரை கூட வென்று கொடுக்க முடியும். நான் இந்திய அணியின் தேர்வாளராக இருந்திருந்தால் கேப்டனுக்கு பிறகு இரண்டாவது ஆளாக சூர்யகுமார் யாதவிற்கே முக்கியத்துவம் கொடுப்பேன். அந்த அளவிற்கு சூர்யகுமார் யாதவ் இந்திய அணிக்கு மிக முக்கியமானவர். ஹர்திக் பாண்டியாவும் இந்திய அணிக்கு முக்கியமானவர் தான், ஆனால் என்னை பொறுத்தவரையில் சூர்யகுமார் யாதவ் தான் மிக முக்கியமானவர். நான் இந்திய அணியின் தேர்வுக்குழுவில் இருந்தால் சூர்யகுமார் யாதவை அணியில் இருந்து நீக்கவே மாட்டேன், ஆனால் உலகக்கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. சூர்யகுமார் யாதவின் ஆட்டம் எனக்கு முன்னாள் வீரர் டிவில்லியர்ஸை நினைவுபடுத்துகிறது. ஒரு சில போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் சொதப்பினாலும் அவருக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதே எனது கருத்து” என்று தெரிவித்தார்.