ஹோம் கிரவுண்டுனு ஆஸ்திரேலிய அணியை அசால்ட்டா நினைக்காதீங்க ; இந்திய அணியை எச்சரித்த தினேஷ் கார்த்திக்..
ஆஸ்திரேலியா அணியை சமாளிப்பது என்பது இந்திய அணிக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கப் போகிறது என இந்திய அணியின் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடி வரும் இந்திய அணி, இந்த தொடருக்கு பின்,வருகிற பிப்ரவரி ஒன்பதாம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தன்னுடைய சொந்த நாட்டில் விளையாடுகிறது.
இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிசுற்றுக்கு தகுதிபெறும் என்பதால்,போட்டியின் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது என தெரிகிறது. இதனால் தொடர் குறித்த சுவாரசியமான கருத்துக்களை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள்.
அந்த வகையில்,இந்திய கிரிக்கெட் குறித்த அதிகமான கருத்துக்களை வெளிப்படையாக பேசி வரும் இந்திய அணியின் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் தெரிவித்ததாவது, “நிச்சயம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இந்த தொடர் மிகவும் கடினமானதாகும், இது இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலான தொடராக அமையப்போகிறது. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மூன்றில் வெற்றி பெறுவது என்பது எளிதான காரியம் கிடையாது, இதனுடைய அர்த்தம் என்னவென்றால் இந்திய அணி தன்னுடைய பலத்தை அறிந்து மற்றும் ஆஸ்திரேலியா அணி சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக செயல்படும் பலவீனத்தை அறிந்தும் செயல்பட வேண்டும். இதில் சிக்கல் என்னவென்றால் இந்திய அணி பேட்ஸ்மேன்களும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை இதனால் இந்திய அணிக்கு இந்த தொடர் மிகவும் சவாலாக இருக்கப் போகிறது”.
“நிச்சயம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரில் சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும் அளவிற்கு இந்திய அணி ஒரு நல்ல வழியை தேடிக் கொள்ள வேண்டும், ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரையில் அவருடைய முக்கியமான சுழற் பந்துவீச்சாளரை(நாதன் லியான்) விட்டுவிட்டு ஆஸ்டன் அகர் அல்லது ஆடம் ஜாம்பா ஆகிய சுழற் பந்துவீச்சாளர்களை அடித்து ஆட வேண்டும். மேலும் அவர்களுக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேலை துருப்புச் சீட்டாக பயன்படுத்த வேண்டும், ஏனென்றால் அக்சர் பட்டேலின் உயரமும் அவருடைய வேரியேசனும் நிச்சயம் எதிரணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் ” எனவும் இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் அறிவுரை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.