3 வருஷமா இருந்த மொத்த வெறியையும் கக்கிய விராட் கோலி… ஒரே இன்னிங்சில் தன்னோட இரண்டு ரெக்கார்டை முறியடித்து அசத்தல்! – ஜாம்பவான் என மீண்டும் நிரூபணம்!

நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 175 ரன்கள் கடந்து விளையாடி வரும் விராட் கோலி, ஒரே இன்னிங்ஸில் தனது இரண்டு முந்தைய ரெக்கார்டுகளை முறியடித்து இருக்கிறார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்து 480 ரன்கள் அடித்து வலுவான ஸ்கொர் பெற்றிருந்தது.

அதன்பிறகு பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர் சுப்மன் கில் 128 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா(35), புஜாரா(42) இருவரும் ஆட்டமிழந்த பிறகு உள்ளே வந்த விராட் கோலி, மூன்றாம் நாள் முடிவில் 59 ரன்கள் அடித்து களத்தில் இருந்தார். கிட்டத்தட்ட 14 மாதங்கள் கழித்து டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் அடித்திருந்தார்.

இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் பேட்டிங் துவங்கிய விராட் கோலி, ஆரம்பத்தில் இருந்தே நிதானமான அணுகுமுறையில் விளையாடி வந்தார். இந்த அரைசதத்தை சதமாக மாற்றுவார் என்கிற எதிர்பார்ப்பு விராட் கோலி மீது அதிகமாக இருந்தது.

இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக, பொறுப்புடன் விளையாடி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 28வது சதத்தை அடித்தார் விராட் கோலி. ஒட்டுமொத்தமாக இவர் அடிக்கும் 75வது சர்வதேச சதமாக இது இருக்கிறது.

இந்த இன்னிங்சில் 107 ரன்களை விராட் கோலி கடந்த போது, இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தார். இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு சென்னை மைதானத்தில் 107 ரன்கள் அடித்திருந்ததே ஆஸி., அணிக்கு எதிராக அதிகபட்சமாக இருந்தது. தற்போது இதனை முறியடித்திருக்கிறார்.

தொடர்ந்து அபாரமாக விளையாடி வந்த விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 11வது முறையாக 150 ரன்களை கடந்தார். 2014 ஆம் ஆண்டு மெல்போன் மைதானத்தில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 169 ரன்கள் அடித்திருந்தார் விராட் கோலி. இதுவே அதிகபட்சமாக இருந்தது. இந்த இன்னிங்ஸில் அதைக்கடந்து, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அதிகபட்ச டெஸ்ட்  ஸ்கோரை பதிவு செய்தார் விராட் கோலி.

Mohamed:

This website uses cookies.