சுப்மன் கில் அடித்த செஞ்சூரியை கேலரியில் அமர்ந்திருந்த விராட் கோலி, எழுந்து நின்று கைதட்டியபடி ஆரவாரத்துடன் கொண்டாடினார். இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. முன்னதாக முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 480 ரன்கள் அடித்து வலுவான நிலையை பெற்றது.
அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்து வரும் இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்கள், புஜாரா 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர். இவர்களுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தார் சுப்மன் கில். முதல் விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் சேர்ந்து 74 ரன்கள் மற்றும் இரண்டாவது விக்கெட்டுக்கு புஜாராவுடன் சேர்ந்து 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது குறிப்பிடத்தக்கது. பொறுப்புடன் விளையாடிய சுப்மன் கில், டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை 194 பந்துகளில் பூர்த்தி செய்தார்.
நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான பிளேயிங் லெவனில் கில் எடுக்கப்படாமல் இருந்தார். மூன்றாவது போட்டியில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் 21 ரன்கள், 5 ரன்கள் என இரண்டு இன்னிங்சிலும் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்து விமர்சனத்திற்கு உள்ளானார்.
இந்த விமர்சனங்கள் அனைத்தையும் தனக்கு பாராட்டு மழைகளாக பொழியும் அளவிற்கு 4வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடி சதம் அடித்திருக்கிறார் சுப்மன் கில். இவர் சதம் அடித்தபோது, அடுத்ததாக களம் இறங்குவதற்காக கேலரியில் காத்திருந்த விராட் கோலி, எழுந்து நின்று கைதட்டியபடி கொண்டாடினார். விராட் கோலி கொண்டாடிய விதத்தை பார்க்கும்பொழுது அவரே சதம் அடித்தால் எப்படி கொண்டாடுவாரோ, அதுபோல இருந்தது.
புஜாரா ஆட்டமிழந்த பிறகு உள்ளே வந்த விராட் கோலி, வந்தவுடனேயே சுப்மன் கில்லிடம் சென்று பாராட்டினார். அதன் பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 58 ரன்கள் சேர்த்தனர். சதம் அடித்து அசத்திய சுப்மன் கில் 128 ரன்களுக்கு அவுட் ஆகினார்.
தற்போது களத்தில் ஜடேஜா மற்றும் விராட் கோலி இருவரும் நின்று விளையாடி வருகின்றனர். 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 283 ரன்கள் அடித்திருக்கிறது இந்திய அணி. ஆஸ்திரேலிய அணியை விட 197 ரன்கள் பின்தங்கிய நிலையிலும் இருக்கிறது.
கில் சதம் அடித்ததை கொண்டாடிய விராட் கோலியின் வீடியோ: