3வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா அணியில் பேட்டிங் வரிசையில் செய்த மாற்றத்தை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார் சஞ்சய் மஞ்ரேக்கர்.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளைப் போல அல்லாமல் சற்று சொதப்புலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியையும் சந்தித்தது
இந்திய அணி முதல் இன்னிங்சில் 109 ரன்களுக்கும் இரண்டாவது இன்னிங்சில் 163 ரன்களுக்கும் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணியை விட 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்ததால், இரண்டாவது இன்னிங்ஸில் 75 ரன்கள் மட்டுமே முன்னிலை வைக்க முடிந்தது.
76 ரன்கள் இலக்கை எளிதாக ஆஸ்திரேலியா அணி சேஸ் செய்து விட்டது. இந்திய அணி இத்தகைய தோல்வியை பெற்றதற்கு பல்வேறு காரணங்களை ஜாம்பவான்கள் மற்றும் விமர்சனங்கள் பலர் தெரிவித்து வந்தாலும், இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர், ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பையும் அவர் பேட்டிங் வரிசையை கையாண்ட விதத்தையும் குறிப்பிட்டு தோல்விக்கு காரணமாக சாடியுள்ளார். சஞ்சய் மஞ்ரேக்கர் பேசியதாவது:
“ரோகித் சர்மா பேட்டிங் வரிசையில் வீரர்களை களம் இறக்கியது எனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. ஸ்பின்னர்களை நன்றாக எதிர்கொள்ளக்கூடிய ஸ்ரேயாஸ் ஐயர் இருக்கும்பொழுது, எதற்காக ஜடேஜாவை அவருக்கு முன்னர் களம் இறக்கினார். இது சரியான முடிவாக தெரியவில்லை.”
“வங்கதேசம் அணிக்கு எதிராக இவ்வாறு களம் இறக்கியபோது அவர்களிடம் இரண்டு இடது கை ஸ்பின்னர் இருந்தார்கள். அது சாதகமாக அமைந்தது. ஆனால் ஆஸ்திரேலியா அணியில் தரமான இரண்டு வலது கை ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். இந்த சமயத்தில் ஜடேஜாவை ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன் இறக்கியது, சிறந்த முடிவு அல்ல.”
களத்தில் இடது கை – வலது கை பேட்டிங் இருந்தால் சரியாக இருக்கும் என்று இத்தகைய முடிவை எடுத்திருக்கிறார். ஆனால் டெஸ்டில் அப்படி இறக்குவது அவசியமில்லை. ஸ்பின்னர்களை யார் நன்றாக எதிர்கொள்கிறார்கள் என்பது அவசியம். ஷ்ரேயாஸ் ஐயர் ஸ்பின்னர்களை எப்படி எதிர்கொள்வார் என்பது தெரியும். அதனால் தான் இந்தியாவிற்கு பின்னடைவை தந்திருக்கிறது. இது சிறந்த கேப்டன்ஷிப் உடையவர்கள் எடுக்கும் முடிவல்ல.” என்றார்.