இந்த இரண்டு பேரும் இல்லாம எந்த தைரியத்துல வங்கதேசம் போனீங்க..? இந்திய அணி மீது முன்னாள் வீரர் கோவம்
வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹலுக்கு இடம் கொடுக்காதது தவறான முடிவு என முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, வங்கதேச அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் போட்டி 4ம் தேதி நடைபெற உள்ளது. டி.20 உலகக்கோப்பையும், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்த இந்திய அணி, வங்கதேச அணியை அதன் சொந்த மண்ணில் எப்படி எதிர்கொள்ள போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருப்பதால் இந்த தொடர் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்தநிலையில், வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா, வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவை எடுக்காதது தவறான முடிவு என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசுகையில், “வங்கதேச அணியுடனான ஒருநாள் தொடரில் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் குல்தீப் யாதவிற்கு இடம் கிடைக்காதது எனக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. இந்திய அணியில் வாசிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல் மற்றும் சபாஷ் அஹமத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர், ஆனால் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இடம்பெறவில்லை. இதன் மூலம் இந்திய அணிக்கு அதிகமான ஆல் ரவுண்டர்கள் தேவை என்பது தெரிய வருகிறது. ஆனால் வங்கதேச ஆடுகளங்கள் சவால் நிறைந்தது, சவால் நிறைந்த ஆடுகளங்களில் சாஹல், குல்தீப் யாதவ் போன்ற விக்கெட் எடுத்து கொடுக்கும் பந்துவீச்சாளர்கள் இல்லாதது இந்திய அணிக்கு பின்னடைவு தான். வங்கதேச ஆடுகளங்களில் குறைவான ரன்கள் மட்டுமே எடுக்க முடியும். வங்கதேச ஆடுகளங்களில் 300+ ரன்கள் அடிப்பது மிக மிக கடினம், எனவே விரைவாக விக்கெட் எடுத்து கொடுக்கும் பந்துவீச்சாளர்கள் மிக அவசியம். ஆனால் இந்திய அணி இந்த முக்கியமான விசயத்தை கூட செய்ய தவறியது வேதனையளிக்கிறது” என்று தெரிவித்தார்.