கேப்டன் பதவிக்கு கே.எல் ராகுல் சுத்தமா செட்டாக மாட்டார்; முன்னாள் வீரர் அதிரடி பேச்சு
சர்வதேச இந்திய அணியை வழிநடத்தும் அனுபவம் கே.எல் ராகுலிடம் இல்லை என வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய அணி வங்கதேச அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில்,நடைபெற்று முடிந்த இரண்டு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரண்டையும் இந்திய அணி தோல்வியடைந்து ஒருநாள் தொடரை இழந்திருக்கிறது.
இதில் என்னதான் இந்திய அணி கடைசி வரை போராடி தோல்வியை தழுவினாலும், பங்களாதேஷ் போன்ற பலம் குறைவான அணியிடம் தோல்வியை தழுவியுள்ளது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 2வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு விரலில் காயம் ஏற்பட்டு விட்டதால் அணியை வழிநடத்தும் பொறுப்பை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல் ராகுலிடம் ஒப்படைக்கபட்டது.
ஆரம்ப கட்டத்தில் பந்துவீச்சாளர்களை சிறப்பாக வழி நடத்திய கே எல் ராகுல்,6வது விக்கெட்டில் களமிறங்கிய மெஹ்தி ஹசனின் விக்கெட்டை எடுப்பதில் கோட்டை விட்டார். உள்ளூர் போட்டி, ஐபிஎல் போட்டி என இரண்டிலும் அணியை சிறப்பாக வழி நடத்தும் கேஎல் ராகுல் சர்வதேச இந்திய அணியை சரிவர வழி நடத்தவில்லை என்ற அவப்பெயரையும் பெற்றுக் கொண்டார்
இந்த நிலையில் ரோஹித் சர்மாவிற்கு காயம் ஏற்பட்டு விட்டால் அதற்கு தகுந்த ஒரு கேப்டன் களத்தில் இல்லாமல் போனது வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது என பெரும்பாலான முன்னால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் குறித்து வெளிப்படையான தன்னுடைய கருத்துக்களை பேசி வரும் இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், சர்வதேச போட்டியை தலைமைத்துவம் தாங்கும் அனுபவம் கே.எல் ராகுலுக்கு இன்னும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வாசிம் ஜாஃபர் தெரிவித்ததாவது,“இந்திய அணியில் சிராஜ் அக்சர் பட்டேல் மற்றும் உம்ரான் மாலிக் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அப்படியிருந்தும் பங்களாதேஷ் அணி, அனைத்தையும் சிறப்பாகவே கையாண்டது. பங்களாதேஷ் அணியின் பேட்டிங் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருந்தது, அவர்கள் ஸ்ட்ரைக் ரேட்டை நன்றாக தக்க வைத்திருந்தனர். இதில் இந்திய அணியில் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனை அணியின் கேப்டன் மைதானத்தில் இல்லை என்பது தான், ரோஹித் சர்மா இல்லாததால் அணி சற்று தடுமாறியது.மேலும் அணியின் பொறுப்பு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுலிடம் ஒப்படைக்கப்பட்டது ஆனால் சர்வதேச இந்திய அணி வழி நடத்தும் அளவிற்கு கே எல் ராகுல் அனுபவசாலி கிடையாது, இதன் காரணமாகவே இந்திய அணி தடுமாறியது. ஆனால் மேற்கூறிய காரணத்தையெல்லாம் வைத்து பங்களாதேஷ் அணியை பாராட்டாமல் இருக்க முடியாது, அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள்” என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.