இந்திய அணியின் அதிரடி வீரர் கே.எல் ராகுல் அனைத்து வகையான போட்டிகளிலும் ஆடவேண்டும் என முன்னால் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட் செய்து குல்தீப் யாதவ் சுழலில் சிக்கி 159/8 என்று மடிய தொடர்ந்து ஆடிய இந்திய அணி ராகுலின் சரவெடி சதத்தில் 163/2 என்று அபார வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கிறது. 18.2 ஓவர்களில் இலக்கை ஊதியது இந்தியா.
50/0 என்று இருந்த இங்கிலாந்து 107/5 என்று ஆனது. கடைசியில் டி.ஜே.வில்லே 15 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்து 29 எடுக்க பட்லர் 18வது ஓவர் வரை நின்று 69 எடுக்க இங்கிலாந்து 159/8 என்று முடிந்தது. இந்தியா தரப்பில் குல்தீப் 5, பாண்டியா 1, உமேஷ் யாதவ் 2 விக்கெட்.
ஷிகர் தவண் 4 ரன்களில் டி.ஜே.வில்லேவின் பந்தில் இன்சைடு எட்ஜில் பவுல்டு ஆனார். அடுத்து வந்த ராகுல் அருமையான டச்சில் இருப்பது அவரது பேட்டிங்கில் பளிச்சிட்டது, ஆனாலும் ஒரு பந்தை அவர் பேக்வர்ட் பாயிண்ட் திசையில் காற்றில் ஆட பந்து கேட்சாக வந்தது ஜேசன் ராய் கோட்டை விட்டார். 26/2 என்று ஆகியிருக்கும் ஆனால் ராயின் தவறை பயன்படுத்திய ராகுல் அதன் பிறகு லியாம் பிளங்கெட்டை 4வது ஓவரில் ஒரு பிளிக், கட் பவுண்டரிகள் அடித்தார்.
மொயின் அலி வந்தவுடன் ரிவர்ஸ் ஸ்வீப் பவுண்டரி மற்றும் ஒரு லாங் ஆன் சிக்ஸ். லியாம் பிளெங்கெட் மீண்டும் பந்து வீச வந்த போது 6,4,4,6 என்று நாசம் செய்யப்பட்டார். 37 பந்துகளில் 85 ரன்கள் என்று இருந்த போது விரைவுச் சதத்துக்கு ராகுல் தயாராக இருந்தார், ஆனால் இங்கிலாந்து கொஞ்சம் இந்தியாவைக் கட்டுப்படுத்தியது ஆனால் அவர் சதமடிப்பதை ஒன்றும் செய்ய முடியவில்லை.
ரோஹித் சர்மா 3 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 32 எடுத்து ரஷீத்திடம் ஆட்டமிழக்கும் போதே இந்திய அணி 130/2 என்று இருந்த்து, ரோஹித், ராகுல் கூட்டணி 11 ஒவர்களில் 123 ரன்களைச் சேர்த்ததில் ரோஹித் பங்களிப்பு 32 மட்டுமே. ராகுல் 101 நாட் அவுட், விராட் கோலி 1 சிக்சருடன் 20 நாட் அவுட்.
இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் மட்டுமே சக்சஸ்புல் பவுலர் (1/25). ஆட்ட நாயகன் குல்தீப் யாதவ். வரும் வெள்ளியன்று கார்டிப்பில் இந்தியா தொடரை வெல்ல நம்பிக்கையுடன் ஆடும், இங்கிலாந்து குல்தீப் யாதவ் அச்சுறுத்தலுக்கு வழி கண்டுபிடிக்க வேண்டும். பிரிஸ்டலில் ஞாயிறன்று இறுதி டி20 போட்டி.