ரிஷப் பண்ட்டின் வளர்ச்சி இந்திய அணிக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது என்று சஞ்சய் மஞ்சரெக்கர் தெரிவித்துள்ளார்.
சமீபமாகவே அதிகம் விமர்சிக்கப்பட்ட வீரர்களில் ஒருவராக வலம் வந்த இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், பேட்டிங்கில் சரியான முறையில் விளையாடுவதில்லை, அடித்து ஆட வேண்டும் என்று தன்னுடைய விக்கெட்டை இழந்து விடுகிறார் என்று விமர்சிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அனைவருடைய விமர்சனத்தையும் தவிடுபொடியாக்கும் வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான விடுபட்ட ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் அசத்தலாக செயல்பட்டு தன்னுடைய திறமையை தெரியப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 89 பந்துகளில் சதத்தை கடந்த ரிஷப் பண்ட் மொத்தம் 146 ரன்கள் எடுத்து தன்னுடைய விக்கெட்டை இழந்தார். அதற்குப்பின் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் அரை சதம் அடித்தும் அசத்தியுள்ளார்.
பேட்டிங்கில் மட்டுமில்லாமல் விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பண்ட் நிச்சயம் எதிர்கால இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக வலம் வருவார் என்று பெரும்பாலான முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல கிரிக்கெட் விமர்சகரான சஞ்சய் மஞ்சரெக்கர் ரிஷப் பண்டின் முன்னேற்றம் இந்திய அணிக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்ததாவது, “ரிஷப் பண்ட் தன்னுடைய விக்கெட் கீப்பிங் வேலையை மிகத் தீவிரமாக செயல்படுவதை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது, பேட்டிங்கில் சிறப்பாக செய்துவிட்டால் சில நேரங்களில் விக்கெட் கீப்பிங் செய்யும் பொழுது சற்று அலட்சியம் ஏற்படும், ஆனால் அப்படியெல்லாம் இல்லாமல் ரிஷப் பண்ட் மிக சிறப்பாக விக்கெட் கீப்பிங் செய்கிறார். ரிஷப் பண்டின் இந்த வளர்ச்சி நிச்சயம் இந்திய அணிக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது, அவர் அதிகம் பேசாமல் தன்னுடைய பொறுப்பை மிகவும் தீவிரமாக செய்கிறார் அவருடைய முன்னேற்றம் இன்றியமையாதது,தோனியை போல் விக்கெட் கீப்பிங்கில் இவர் முன்னேறிக் கொண்டு வருகிறார். அவருடைய ஈடுபாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, ஒரு பேட்ஸ்மேனாக சிறப்பாக செய்துவிட்டால் விக்கெட் கீப்பிங் சற்று எளிதாக செய்யலாம் அப்படி இல்லாமல் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்படுகிறார்” என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது .