முகமது சிராஜ் வேண்டாம்… அடுத்த போட்டியில் இவருக்கு வாய்ப்பு கொடுங்க; இந்திய அணிக்கு அட்வைஸ் கொடுக்கும் ஹர்பஜன் சிங்
இங்கிலாந்து அணியுடனான அடுத்த போட்டிக்கான ஆடும் லெவனில் ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை விளையாடியுள்ள ஐந்து போட்டிகளிலும் மிரட்டல் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி 29ம் தேதி நடைபெறும் தனது அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருவதன் மூலமே ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் போன்ற வலுவான அணிகளையும் இந்திய அணியால் இலகுவாக வீழ்த்த முடிந்தது.
இந்திய அணி தனது அடுத்த போட்டியில் சந்திக்க இருக்கும் இங்கிலாந்து அணியும் வலுவானது தான் என்பதால், முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா இங்கிலாந்து இடையேயான போட்டி குறித்து பேசிய முன்னாள் இந்திய வீரரான ஹர்பஜன் சிங், அடுத்த போட்டிக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், “குல்தீப் யாதவ் தற்போது நல்ல பார்மில் உள்ளார். குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜாவுடன் அடுத்த போட்டியில் ரவிச்சந்திர அஸ்வினுக்கும் இந்திய அணி வாய்ப்பு கொடுக்க வேண்டும். இங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வதில் தடுமாறும் என்பதால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவது சரியாக இருக்கும். முகமது சிராஜ் ஓய்வே இல்லாமல் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் இங்கிலாந்து அணியுடனான போட்டியில் இருந்து அவருக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அவருக்கு பதிலாக ரவிச்சந்திர அஸ்வினுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்கலாம். இந்தியா இங்கிலாந்து இடையேயான போட்டி நடைபெற இருக்கும் ஆடுகளத்தில் பெரிதாக ரன் குவிக்க முடியாது, ஆடுகளம் பந்துவீச்சிற்கே சாதகமாக இருக்கும். இதன் காரணமாகவே மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி இங்கிலாந்தை சந்திக்க வேண்டும் என கூறுகிறேன்” என்று தெரிவித்தார்.