ஓவல் பே மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு கிடைத்த வித்தியாசமான வரவேற்ப்பு !!
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது போட்டியில் விளையாடுவதற்கான ஓவல் மைதானம் வந்த இந்திய அணி வீரர்களுக்கு வித்தியாசமான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 ஒரு நாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரிகள் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான ஒரு நாள் தொடர் நேற்று முன் தினம் (ஜன.23) தொடங்கியது.
நேப்பியரில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை (ஜன.26) மவுண்ட் மான்கனூயி நகரில் உள்ள பே ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று (ஜன.25) ஓவல் மைதானம் வந்து சேர்ந்தனர்.
இந்திய வீரர்களை, பழங்குடி மக்கள் தங்கள் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் நடனமாடி வரவேற்றனர். இந்த வித்தியாசமான வரவேற்பு வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியுடனான ஒருநாள் தொடர் குறித்து நியூசிலாந்து வீரர் பெர்குஷான் பேசியதாவது;
நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பது தான் உண்மை. எங்களது தவறால் தான் தோல்வியடைந்தோம். கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது சகஜம் தான். இந்திய அணியுடனான முதல் போட்டியில் அடைந்த தோல்வியில் இருந்து மீண்டு வருவோம். முதல் போட்டியில் செய்த தவறுகளை சரி செய்து கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் களமிறங்குவோம்” என்றார்.
மேலும் பேசிய அவர் விராட் கோஹ்லியின் ஆட்டத்தை தடுப்பதற்கு தேவையான அனைத்து பிளான்களும் தயாராக உள்ளதாகவும், அடுத்தடுத்த போட்டிகளில் நியூசிலாந்து அணி திருப்பி அடிக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.