உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சவுதம்டனில் ஜூன் 5-ந் தேதி நடக்கிறது.
முன்னதாக போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் தலா 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. லண்டனில் இன்று நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது. உலக கோப்பைக்கு சிறந்த முறையில் தயாராக பயிற்சி ஆட்டம் முக்கியம் என்பதால் இரு அணிகளும் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ள முயற்சிக்கும். இந்திய அணியில் 4-வது பேட்டிங் வரிசைக்கு பொருத்தமான வீரர் யார் என்பதை அறிய இந்த பயிற்சி ஆட்டம் உதவக்கூடும். இது பயிற்சி ஆட்டம் என்பதால் அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்களையும் மாற்றி, மாற்றி களத்தில் இறக்க அனுமதி உண்டு.
சவுதம்டனில் இன்று நடைபெறும் மற்றொரு பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது
இந்த வகையில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது முதல் பயிற்சி ஆட்டத்தில், நியூஸிலாந்து அணியுடன் இன்று மோதுகிறது.
கோப்பையை வெல்லக்கூடிய அணிகளுள் ஒன்றாக கருதப்படும் இந்திய அணி, பயிற்சி ஆட்டத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதில் முனைப்பு காட்டக்கூடும். மேலும் பேட்டிங்கில் 4-வது வரிசை வீரர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இடத்துக்கு கே.எல்.ராகுல், விஜய் சங்கர் இடையே கடும் போட்டி நிலவக்கூடும்.
இதற்கிடையே இந்த பயிற்சி ஆட்டத்திலும், 28-ம் தேதி மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடைபெறும் பயிற்சி ஆட்டத்திலும் நியூஸிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான டாம் லேதம் களமிறங்க மாட்டார் என அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
விரல் பகுதியில் காயம் அடைந்துள்ள டாம் லேதம் உலகக் கோப்பை தொடரின் முதல் ஆட்டத்திலும் (ஜூன் 1-ம் தேதி, இலங்கைக்கு எதிராக) களமிறங்குவதும் சந்தேகம் என்றே கூறப்படுகிறது. பயிற்சி ஆட்டங்களில் டாம் லேதமுக்கு பதிலாக டாம் பிளெண்டல் களமிறங்க உள்ளார்.