பிரிதிவி ஷா? ஷுப்மன் கில்? யார் டி20ல் ஓபனிங் செய்யவேண்டும்? – கவுதம் கம்பீர் கணிப்பு!

பிரித்வி ஷா அல்லது ஷுப்மன் கில் இருவரில் யாருக்கு டி20 போட்டி செட் ஆகும்? என கவுதம் கம்பீர் கணித்துள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அபாரமாக பேட்டிங் செய்து, சதம் மற்றும் இரட்டை சதம் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்து வரும் சுப்மன் கில், இலங்கை அணியுடனான டி20 தொடரின்போது டி20 போட்டிகளில் அறிமுகம் செய்யப்பட்டார். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடி வருகிறார்.

முதல் போட்டியில் 6 பந்துகளில் 7 ரன்கள் அடித்தார். இரண்டாவது டி20 போட்டியில் 9 பந்துகளில் 11 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தார். ஒருநாள் போட்டிகளில் இருக்கும் பார்மை டி20 போட்டியில் தொடர முடியாமல் திணறி வருகிறார்.

கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கழித்து மீண்டும் டி20 அணியில் இடம் பெற்றுள்ள பிரித்வி ஷா பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் வெளியில் அமர்ந்திருக்கிறார். டி20 போட்டிகளில் சற்று திணறி வரும் சுப்மன் கில்லுக்கு பதிலாக பிரித்வி ஷா பிளேயிங் லெவலில் எடுத்துவரப்பட்டால் இந்திய அணிக்கு நல்ல துவக்கம் கிடைக்கும் என்று பலரும் விவாதித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரித்வி ஷா அல்லது சுப்மன் கில் இருவரில் யார் டி20 போட்டிகளில் ஓபனிங் செய்வதற்கு சரியாக இருப்பார்? என்கிற விவாதத்திற்கு தனது கருத்தை முன்வைத்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர்.

“சுப்மன் கில் ஸ்பின்னர்களுக்கு எதிராக இன்னும் நன்றாக விளையாட வேண்டும். பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரின் போதும் ஸ்பின்னர்களுக்கு திணறினார். ஒருநாள் போட்டிகளில் நல்ல பேட்டிங் விக்கெட் இருந்தது. அதில் துவக்கத்தில் சில ஓவர்கள் நிதானமாக விளையாடிவிட்டால் அதன் பிறகு ஸ்பின்னர்களை எதிர்கொள்வதற்கு பெரிய சவால் இருக்காது. அந்த வகையில் கில் இன்னும் டி20 போட்டிகளில் தனது காலை பதிக்கவில்லை. ஸ்பின்னர்களை எதிர்கொள்வதற்கு இன்னும் பயிற்சிகள் செய்ய வேண்டும். அதிலும் சர்வதேச டி20 போட்டிகளில் துளி தவறுக்கும் இடம் கொடுக்கக்கூடாது.” என்றார்.

மேலும் பிரித்வி ஷா மற்றும் சுப்மன் கில் இரண்டு பேரையும் ஒப்பிட்டு பேசிய போது, “சுப்மன் கில்லின் அடிப்படை பேட்டிங் அணுகுமுறை 50-ஓவர் போட்டிகளுக்கு ஏற்றவாறு இருக்கிறது. நிறுத்தி நிதானமாக விளையாடி, பின்னர் ஆட்டத்தை நன்றாக எடுத்துச் சென்றுள்ளார். ஆனால், பிரித்வி ஷா துவக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடக் கூடியவர். அவருடைய அடிப்படை பேட்டிங் அணுகுமுறை டி20 போட்டிகளுக்கு சரியானதாக இருக்கிறது.

இரண்டு பேரின் திறமையிலும் எந்தவித குறையும் இல்லை. யாரை எந்த போட்டியில் பயன்படுத்த வேண்டும் என்பதை அணி நிர்வாகம் தான் திட்டமிட்டு முடிவு செய்ய வேண்டும். இப்போது கில் இருக்கும் பார்மிற்கு வெளியில் அமர்த்துவது நன்றாக இருக்காது என்கிற காரணத்தினால் அவருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருவதாக பார்க்கிறேன்.” என்றார்.

Mohamed:

This website uses cookies.