டி20 தொடருக்கான சூப்பர் ஸ்டார் சூரியகுமார் யாதவ் தான் ; முன்னாள் வீரர் சொல்கிறார்..
உலகளவில் டி20 தொடருக்கான சூப்பர் ஸ்டாராக சூரியகுமார் யாதவ் வளர்ந்துள்ளார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிரெட் லீ பாராட்டியுள்ளார்.
பல வருட போராட்டத்திற்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த சூர்யகுமார் யாதவ், தனது மிரட்டல் பேட்டிங்கின் மூலம் வெகு விரைவாகவே இந்திய அணியில் தனக்கான இடத்தை கெட்டியாக பிடித்து கொண்டார்.
ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை குறையே சொல்ல முடியாத அளவிற்கு செயல்பட்டு வரும் சூர்யகுமார் யாதவ், ஒரு வருடத்திற்குள் டி.20 போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 இடத்தை பிடித்தார்.
நடந்து முடிந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்று வரை தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவரான சூர்யகுமார் யாதவ், தற்போது நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
இப்படி தனக்கு கிடைத்த போட்டிகளில் எல்லாம் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தி வரும் சூரியகுமார் யாதவை உலகெங்கும் இருக்கும் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ப்ரேட்லி, உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியிருந்தாலும் சூரியகுமார் யாதவின் அபாரமான வளர்ச்சி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது என சூரியகுமார் யாதவை பாராட்டி பேசியுள்ளார்.
சூரியகுமார் யாதவ் குறித்து பிரெட் லீ பேசுகையில், “நடந்து முடிந்த 2022 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெறவில்லை என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.ஆனால் சூரிய குமாரின் அபாரமான வளர்ச்சி அனைவரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது. தற்பொழுது உலக அளவில் டி20 தொடருக்கான சூப்பர் ஸ்டாராக சூரியகுமார் யாதவ் திகழ்கிறார்.கடந்த 12-15 மாதத்திற்குள் சர்வதேச போட்டியில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பதித்துள்ள சூரியகுமார் யாதவியின் வளர்ச்சி உண்மையில் பாராட்டிற்குரியது.
ஆஸ்திரேலிய மைதானத்தில் பந்து ஸ்விங்கானாலும் பவுன்ஸானாலும் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் டெர்மினேட்டர் போன்று அடித்து துவம்சம் செய்துள்ளார். இவருடைய ஒவ்வொரு ஷாட்டும் செஸ் கிராண்ட் மாஸ்டர் போன்று மிக கச்சிதமாக உள்ளது, அவருடைய ஆட்டத்தை மிகவும் ரசிக்கிறேன் நான் நான் அவருக்கு கொடுக்கும் அறிவுரை என்னவென்றால் அது எந்த ஒரு அறிவுரையும் இல்லை என்பதுதான், அவர் தற்பொழுது செய்வதையே மாற்றிக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும் என சூரியகுமார் யாதவை பிரெட் லீ வெகுவாக பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.