எல்லா திட்டமும் பக்காவா இருக்கு… சத்தமே இல்லாம பெரிய சம்பவம் செய்ய போறோம்; எச்சரித்த நியூசிலாந்து வீரர்
அரையிறுதி போட்டியில் இந்திய அணியை சமாளிக்க தேவையான அனைத்து திட்டங்களும் தங்களிடம் இருப்பதாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான மிட்செல் சாட்னர் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் மோத உள்ளன.
இந்தியா – நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரிலும் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. தற்போது மீண்டும் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ள இருப்பதால் இந்த முறையாவது நியூசிலாந்து அணியை வீழ்த்தி பழி தீர்க்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் வெறித்தனமாக இந்தியா – நியூசிலாந்து இடையேயான போட்டிக்காக மிகுந்த ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்தநிலையில், இந்திய அணியுடனான அரையிறுதி போட்டி குறித்து பேசிய நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான மிட்செல் சாட்னர், இந்திய அணியை சமாளிக்க தேவையான அனைத்து திட்டங்களும் தங்களிடம் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மிட்செல் சாட்னர் பேசுகையில், “இந்திய அணியுடனான போட்டிக்கு தேவையான அனைத்து திட்டங்களும் எங்களிடம் உள்ளது. மைதானத்தில் இருக்கும் ஒட்டுமொத்த ரசிகர்களும் இந்திய அணிக்கு ஆதரவாக ஆரவாரம் செய்தாலும், நாங்கள் எங்களது வேலையை சத்தம் இல்லாமல் செய்து முடிப்போம். எங்களது விளையாட்டில் மட்டுமே நாங்கள் முழு கவனத்தையும் செலுத்துவோம். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப எங்களின் வியூகங்களையும் மாற்றி கொள்வோம். இந்திய அணியின் முதல் 7 வீரர்களின் விக்கெட்டை விரைவாக கைப்பற்றுவது எப்படி என்பது எங்களுக்கு தெரியும். எங்களது திட்டங்களை கச்சிதமாக செய்து முடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை விரைவாக வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணி மீது அழுத்தத்தை ஏற்படுத்த முடியும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும், எனவே எங்களால் முடிந்தவரை இந்திய வீரர்களின் விக்கெட்டை விரைவாக கைப்பற்றுவோம்” என்று தெரிவித்தார்.