இனி இது எல்லாம் கோலிக்கு அசால்ட்டு… ஐபிஎல் தொடருக்கு முன்பே கோலி இந்த பெரிய சாதனையை செய்வார்; கவாஸ்கர் உறுதி
பேட்டிங்கில் மிக சிறப்பான பார்மில் இருக்கும் விராட் கோலியை முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கர் வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
சமகால கிரிக்கெட் உலகின் முடி சூடா மன்னனாக திகழ்ந்து வரும் விராட் கோலி, கிட்டத்தட்ட கடந்த மூன்று வருடங்கள் மிக மிக கடுமையான விமர்ச்சனங்களை எதிர்கொண்டார்.
72 சதங்களை மிக மிக இலகுவாக எட்டிய விராட் கோலி, 72வது சதத்திற்கு பிறகு பேட்டிங்கில் தடுமாறினார். இதனால் இந்திய அணியின் கேப்டன் பதவியையும் இழந்த விராட் கோலி, அதன்பின் பல்வேறு கட்ட பிரச்சனைகளையும் எதிர்கொண்டார். கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக சிறிது ஓய்வு எடுத்து கொண்ட விராட் கோலி, கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து பழைய விராட் கோலியாக மாறி, எதிரணிகளை திணறி வருகிறார்.
கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தன் வாழ்நாளின் மிக சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்திய விராட் கோலி, அதன்பின் சதங்கள் அடிப்பதையும், அதன் மூலம் பல சாதனைகள் புரிவதையும் வாடிக்கையாக்கிவிட்டார்.
இந்த வருடத்தில் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே சதம் அடித்த விராட் கோலி, அவரது கடைசி நான்கு இன்னிங்ஸில் 3 சதங்கள் விளாசி அசத்தினார். இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாடிய 166 ரன்கள் குவித்ததும், அவர் விளையாடிய விதமும் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் விராட் கோலியை வியந்து பாராட்டி வருகின்றனர்.
அந்தவகையில், முன்னாள் இந்திய வீரரான சுனில் கவாஸ்கரும் தன் பங்கிற்கு விராட் கோலியை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார்.
விராட் கோலியை பாராட்டி பல்வேறு விசயங்கள் பேசிய சுனில் கவாஸ்கர், ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள் அடித்து, சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரும் சாதனையை சமன் செய்வார் என்றும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில், “விராட் கோலி தற்போது விளையாடி வரும் விதத்தையும், அவரது தற்போதைய பார்மையும் பார்க்கும் பொழுது இனி சதம் அடிப்பது அவருக்கு பழைய படி இலகுவானதாகவே இருக்கும் என்றே தெரிகிறது. ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்திய அணி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக 6 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளதால், விராட் கோலி ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே இன்னும் மூன்று சதங்கள் அடித்து, சச்சின் டெண்டுலரின் மிகப்பெரும் சாதனையான ஒருநாள் போட்டிகளில் 49 சதத்தை விராட் கோலி சமன் செய்வார். அவரால் இது நிச்சயம் முடியும் என நான் முழுமையாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.