முதல் போட்டியில் எங்களது இரண்டு முக்கிய வீரர்கள் இடம்பெற மாட்டார்கள், இது மிகப்பெரிய பின்னடைவை தந்திருக்கிறது என நியூசிலாந்தின் கேப்டன் டாம் லேத்தம் பேட்டி அளித்துள்ளார்.
இலங்கை தொடரை முடித்துவிட்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. ஹைதராபாத் மைதானத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 18ஆம் தேதி துவங்குகிறது.
பாகிஸ்தான் அணியுடனான ஒருநாள் தொடரை கைப்பற்றிவிட்டு நியூசிலாந்து அணியும் இந்தியாவிற்கு வந்துவிட்டனர். இரு அணிகளும் ஹைதராபாத் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காயம் மற்றும் காண்ட்ராக்ட் காரணமாக நியூசிலாந்து அணி சில முன்னணி வீரர்களை இந்திய சுற்றுப்பயணத்திற்கு அழைத்து வரவில்லை. அதில் குறிப்பாக டிம் சவுத்தி, ட்ரெண்ட் போல்ட், கேன் வில்லியம்சன் மற்றும் ஜிம்மி நீசம் ஆகியோர் இருக்கின்றனர். அதேபோல் இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதுவும் சற்று பின்னடைவாகவே இருக்கிறது.
தங்களது அணியில் சில முக்கிய வீரர்கள் இல்லாதது குறித்தும், அது எந்த அளவிற்கு பின்னடைவை தந்திருக்கிறது என்றும் பேசியுள்ளார் டாம் லேத்தம். அவர் கூறியதாவது:
ட்ரென்ட் போல்ட், கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சவுதி போன்றோர் அணியில் இல்லை என்பது மிகப்பெரிய துளையை எங்கள் அணிக்குள் போட்டுள்ளது. இது போட்டி துவங்குவதற்கு முன்னரே எங்களுக்கு பின்னடைவை கொடுத்திருக்கிறது.
மற்றொருபுறம், அணியில் இளம் வீரர்கள் துடிப்புடன் செயல்படுவதற்காக காத்திருக்கின்றனர். அவர்கள் சர்வதேச அனுபவமும் பெற்றிருப்பது கூடுதல் பலத்தை கொடுக்கிறது. இளம் வீரர்களுடன் இணைந்து துடிப்புடன் செயல்படுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம். பந்துவீச்சில் தாக்குதல் ஏற்படுத்த லாக்கி பெர்குஷன் இருக்கிறார். அவர் இந்திய மண்ணில் நிறைய அனுபவம் கொண்டிருக்கிறார். பலமிக்க இந்திய அணியை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்றாலும், இறுதிவரை துடிப்புடன் போராடுவதற்கும் வெற்றியை பெறுவதற்கும் எங்கள் அணியிலும் வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டுவோம்.” என்றார்.