இம்முறை நாங்கள் கோப்பையை வெல்வதற்கான வழியை வகுப்போம் என்று தனது பேட்டியில் நம்பிக்கையாக பேசியுள்ளார் கேப்டன் ரோகித் சர்மா.
2007 ஆம் ஆண்டு முதல் முறையாக கிரிக்கெட் உலகிற்கு டி20 உலக கோப்பை என்கிற புதிய கிரிக்கெட் தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. அப்போது தோனி தலைமையிலான இளம் பட்டாளம் இந்திய அணியில் விளையாடியது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் களம் இறங்கி பல அனுபவம் பெற்ற பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்று அங்கும் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தட்டி தூக்கி வந்தது.
முதல் டி20 உலக கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையும் இன்றளவும் இந்தியாவிற்கு உண்டு. அந்த அணியில் பங்கேற்றிருந்த ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் தற்போது 15 வருடங்கள் கழித்தும் இந்திய டி20 அணியில் விளையாடி மீண்டும் ஒரு பெருமையை சேர்த்து வருகின்றனர்.
இம்முறை ரோகித் சர்மா இந்திய அணிக்கு தலைமை வகித்து வருகிறார். முதல்முறையாக இந்திய அணியை உலக கோப்பைக்கு வழிநடத்திச் செல்கிறார். கேப்டன் பொறுப்பேற்று விளையாடுவதையும், இத்தனை ஆண்டு காலம் இந்திய அணியில் பயணித்ததையும், முதல் உலகக் கோப்பைக்கும் தற்போதும் இருக்கும் வித்தியாசத்தையும் தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,
“இந்திய அணி நீண்ட காலமாக உலக கோப்பையை வெல்லவில்லை. இம்முறை அதற்கான பல்வேறு ஏற்பாடுகளை செய்து களமிறங்க உள்ளோம். டி20 உலக கோப்பைக்கு முன்பு இரண்டு தொடர்களை வென்ற நம்பிக்கையுடன் களமிறங்க உள்ளோம். இந்திய மைதானத்தில் விளையாடியதற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று தெரியும். ஆனால் ‘வெற்றி’ கொடுக்கும் நல்ல மனநிலை அளப்பரியது. அடுத்தடுத்த போட்டிகளில் என்ன செய்ய வேண்டும்? எதிரணியை வீழ்த்துவதற்கு என்னென்ன நுட்பங்களை பின்பற்ற வேண்டும்? என்று தொடர்ந்து திட்டமிட்டு அதில் முழு கவனம் செலுத்தி வருகிறோம்.
2007 ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் விளையாடிய போது அதிகபட்சம் 140 அல்லது 150 ரன்கள் அடித்தால் போதும். ஆனால் தற்போது அதை 14-15 ஓவர்களில் சேஸ் செய்துவிடுகிறார்கள். ஆகையால் பேட்ஸ்மேன்கள் முன்பை விட பல மடங்கு கவனத்துடன் செயல்பட வேண்டியது இருக்கிறது.
இந்திய அணி பேட்டிங் பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அவ்வளவு அனுபவம் மிக்க திறமையான வீரர்கள் உள்ளனர்.” என்று பேசினார்.